
posted 13th January 2023
மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல வடக்கு மாகாணத்தில் பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் மக்களுக்கு நீண்ட காலமாக மக்களின் தேவைகளை அறிந்து உதவிக்கரம் நீட்டிவரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நல்லின பாரம்பரிய நெல் இலவசமாக வழங்கியது.
இந் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள நெல் களஞ்சிய சாலையில் இடம்பெற்றது.
மன்னார் மெசிடோ நிறுவனம் கடந்த காலத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டுக்குள் வசிக்கும் விவசாயிகளுக்கு சுத்தமான பாரம்பரிய நெல் உற்பத்திக்காக நெல் இலவசமாக வழங்கியது.
இந் நெல்லின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லில் இவர்களிடமிருந்து மீளப்பெற்ற நெல்லை முருங்கன் பகுதியிலுள்ள நெல் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந் நெல்லிலிருந்து 1800 கிலோ நெல் வறுமைக் கோட்டுக்குள் வாழும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் 'மெசிடோ' நிறுவன பணிப்பாளர் யாட்சன் பிகிராடோவின் தலைமையில் அந் நிறுவன குழுமத்தினால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)