
posted 17th May 2022
கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய தமிழ் நாட்டில் வசித்துவரும் அனைவரும் இங்கேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புகிறோம். இது ஒரு உணர்வுபூர்வமான முடிவு என்பதையும் தாண்டி, ஒரு குடிமகனுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக வாழ்வுரிமையை அனைவரும் மதிக்கிறோம். அதை பெரிதும் விரும்புகிறோம். எனவேதான், நாங்களும் இந்த நாட்டின் குடிமக்களாக இறையாண்மையோடு வாழ விரும்பி இந்தியக் குடியுரிமையைக் கோருகிறோம் என தமிழகம் வாழ் இலங்கைத் தமிழர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சென்னை. பாரதீய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈ ஸ் (வி.ஓ) அவர்களிடம் கையளிக்கப்பட்ட மகஜரில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தமிழகம் வாழ் இலங்கைத் தமிழர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சென்னை பாரதீய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈ ஸ் (வி.ஓ) அவர்களை திங்கள் கிழமை (16.05.2022) அவரின் அலுவலகத்தில் சந்தித்து வழங்கிய மகஜரில் தெரிவத்திருப்பதாவது;
'ஸ்ரீ ராமபிரானுக்கு அணில் உதவியது போல இலங்கை தமிழர்களுக்கு உதவியாக இருப்பேன்' என்று தாங்கள் கூறிய வார்த்தைகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதிகொண்டு பின்வரும் விடயங்களை தங்களிடம் சமர்பிக்கின்றோம்.
இலங்கை உள்நாட்டு போரின் காரணமாக அங்கு உயிர்பிழைக்க வழியின்றி நாட்டை விட்டு வெளியேறிய பல இலட்சம் மக்களில் தமிழகத்தில் அமைந்துள்ள 106 முகாம்களில் 58,500 நபர்களும் முகாம்களுக்கு வெளியில் வெளிப்பதிவில் சுமார் 34,000 நபர்களும் என ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வசித்து வருகிறோம்.
இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் அடைக்கலம் புகுந்த மக்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பிரகடனம் மற்றும் தொடர்புடைய சர்வதேச சட்டங்களின்படி அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், இந்தியா, ஐக்கிய நாடுகளின் அகதிகள் பிரகடனத்தில் ஒரு உறுப்பு நாடாக இல்லாத காரணத்தாலும், இந்தியாவில் அகதிகளுக்கு என ஒரு உள்நாட்டு சட்டம் இல்லை என்ற நிலையிலும், இந்த நாட்டிற்குள் உரிய பயண ஆவணங்கள் ஏதும் இன்றி வந்த சட்டவிரோத குடியேறிகள் என்று கருதப்பட்டு வருகிறோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது மிகுந்த மன உளைச்சலையும் ஏமாற்றத்தையும் அளித்தது.
தமிழகத்தில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்திய குடியுரிமை பெற்று இங்கேயே தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள்.
கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வாழ்ந்துவரும் நாங்கள் மொழியாலும், பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களோடும் வேறுபடுத்தி பார்க்க முடியாத விதத்தில் இங்குள்ள தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் நீண்ட நெடிய பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் இருப்பதை தாங்களும் அறிவீர்கள்.
முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இங்கு பிறந்த குழந்தைகள், இந்தியர்களை திருமணம் செய்தவர்கள் என்று பிரித்து பார்க்க முடியாத ஒரு வாழ்வியல் சூழல் இங்கு அனைவருக்கும் அமைந்துவிட்டது. எனவேதான், இங்குள்ள அனைவரும் குடியுரிமை பெற்று இங்கேயே வாழ விரும்புகிறோம். இலங்கையிலும் தொடர்ந்து நிச்சயமற்ற ஒரு அரசியல் நிலை தொடர்ந்து நிலவி வருவதையும் அங்குள்ள தற்போதைய களநிலையையும் தங்களது இலங்கைப் பயணம் தெளிவுபடுத்தியிருக்கும் என்று கருதுகிறோம்.
எனவேதான், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இங்கு வசித்துவரும் அனைவரும் இங்கேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புகிறோம். இது ஒரு உணர்வு பூர்வமான முடிவு என்பதையும் தாண்டி, ஒரு குடிமகனுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக வாழ்வுரிமையை அனைவரும் மதிக்கிறோம் அதை பெரிதும் விரும்புகிறோம். எனவேதான், நாங்களும் இந்த நாட்டின் குடிமக்களாக இறையாண்மையோடு வாழ விரும்பி இந்தியக் குடியுரிமையைக் கோருகிறோம்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசும் இலங்கைத் தமிழர்கள் சமத்துவத்துடனும், கௌரவத்துடனும் வாழ்வதற்கு முன்னுரிமை அளித்து சம உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்து வருவதை அண்மைய நிகழ்வுகள் சான்று பகிர்கின்றன.
'தமிழகத்திற்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நலனை பாதுகாக்க, தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது' என்று தாங்கள் வரவேற்று இருப்பது அரசியல் கடந்து, இலங்கைத் தமிழர்களின் நலனில் அனைவரும் அக்கறை கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
2019 ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு சட்ட சிக்கல்கள் காரணமாக வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டு இருந்தாலும், அதன் பின்பு நடந்த பின்வரும் நிகழ்வுகள் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை கோரிக்கை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்து நம்பிக்கை அளிக்கிறது.
1. இலங்கை அகதிகளுக்கு 'குடியுரிமை' கோருவது தொடர்பாக 'சரியான நேரத்தில்' பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அவர்கள் முன்னாள் தமிழக முதல்வருக்கு உறுதியளித்திருந்தார். (செய்தி: Deccan Herald- 22 December 2019)
2. 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிகை திருத்தச் சட்டத்தில் (சிஏஏ) ஒரு பகுதியாக இலங்கை அகதிகள் சேர்க்கப்படவில்லை என்ற போதிலும், 95,000 இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான செயல்முறைகள் பரிசீலனையில் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் மரியாதைக்குரிய நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தெரிவித்திருந்தார். (செய்தி: Business Standard - 19 January 2021)
3. 2021 ஆம் ஆண்டு தமிழக டீது யின் தேர்தல் தொலைநோக்கு பிரமாணத்தில் (பக்கம் 24ல்) தமிழக முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. தங்களது இலங்கை பயணத்தின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டதுபோல் 'இலங்கைத் தமிழர்கள் மொழியால் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டவர்கள் அல்ல இன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்ற வாதத்தை வலிமையாக முன்வைத்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட செய்திகளும், தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் நம்பிக்கையான எதிர்காலத்தை உறுதி செய்யும் விதமாக அமைந்து வருகிறது.
இலங்கைத் தமிழர்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் அணுகி எடுத்துரைக்கவும், அவற்றை கரிசனையுடன் செவிசாய்த்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயற்சிக்கும் தங்களின் தலைமையிலான செயல்பாடுகளும் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த வரமாகும். அந்த வாய்ப்பினை வழங்கிவரும் தங்களுக்கு அனைத்து இலங்கைத் தமிழர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை கோரிக்கையை உணர்வுப்பூர்வமாக அணுக முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், எங்கள் உணர்வுப்பூர்வமான கோரிக்கைகளை முன்வைக்க மாண்புமிகு பாரதப் பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்களை நேரில் சந்திக்க தாங்கள் ஒரு அரிய வாய்ப்பை ஏற்ப்படுத்தி தரவேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தமிழகம் வாழ் இலங்கைத் தமிழர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இவ்வாறு தங்கள் மகஜரில் தெரிவித்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY