
posted 5th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் சொத்துகள், நிதி முடக்கியது அரசு
ரி. ஆர். ஓ. என்று அறியப்பட்ட தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் சொத்துகள் மற்றும் நிதி முடக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது அரசு.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்னவின் ஒப்பத்துடன் இந்த வர்த்தமானி நேற்றுமுன்தினம் வெளியானது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் இலங்கை மற்றும் சர்வதேசத்தில் உள்ள கிளைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயல்பாடுகளும் பயங்கரவாதத்துக்கு காலத்துக்கு காலம் நிதியளித்தலுமே தடைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வு கழகம் தவிர உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் நிவாரண நிதியம், கனடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் சொத்துகள் மற்றும் நிதிகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், விடுதலைப் புலிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்தனர் என்ற குற்றச்சாட்டில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக 113 பேரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
தமிழர் புனர்வாழ்வு கழகம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் நடத்தப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்புக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சொத்துகளும் பல வங்கிகளில் கணக்குகளும் உள்ளன. 2009 போரில் விடுதலை புலிகள் அமைப்பு செயலிழந்ததை தொடர்ந்து தமிழர் புனர்வாழ்வு கழகமும் உள்நாட்டில் செயலிழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)