
posted 15th January 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.
தேசிய பொங்கல் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சிவன் ஆலயப் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குகிறார். இதில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்தார்.
இந்தப் பொங்கல் விழாவில் பங்கேற்க, வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி, வலி. வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள காணிகளையும் சென்று பார்வையிடுவார். அவற்றில் ஒரு பகுதியை விடுவிக்கவும் நடவடிக்கை எடுப்பார். அத்துடன், பல்வேறு விடயங்களிலும் அவர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் மதத் தலைவர்களை சந்தித்தார்
தேசிய பொங்கல் கொண்டாட்டத்துக்காக நேற்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் ஞாயிறு .மதத் தலைவர்களை சந்தித்தார்.
நல்லை ஆதின குருமுதல்வர் சிறீலசிறீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற அவர், யாழ். மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்து ஆசி பெற்றார்.
அத்துடன், யாழ். நகரிலுள்ள நாக விகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன், உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)