
posted 11th May 2022
“ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய அரசை ஸ்தாபித்து, நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்திய பின்னர், இது சம்பந்தமாக பேச்சு நடத்தி, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு இன்று புதன் ஆற்றிய உரையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை வருமாறு:
இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கியது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுவான பிரேரணை பல்வேறு கட்சிகளினால் முன்வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுடன் பலமுறை கலந்துரையாடியுள்ளேன். நானும் அந்த ஆலோசனையை ஏற்று இந்த தீர்வுக்கு களம் அமைக்க சில கடினமான முடிவுகளை எடுத்தேன்.
கடந்த அமைச்சரவையை நியமிக்கும்போது அப்போது இருந்த பெருமளவிலான சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் ராஜபக்ஷக்கள் எவரும் இல்லாத இளம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது. அத்துடன், பிரதமர் பதவி விலகியதுடன், முழு அமைச்சரவையையும் கலைத்துவிட்டு, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடமளிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
ஆனால், மே மாதம் 09ஆம் திகதி திங்கட்கிழமை காலை, நீங்கள் அனைவரும் அறிந்தபடி, மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிகக் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் கலவரம் வெடித்தது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு முப்படைகள் குவிக்கப்படுவதற்கு முன்னரே இந்தச் செயற்பாடு நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடம்பெற்றது. சில மணி நேரங்களில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட சுமார் ஒன்பது பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதேபோன்று சுமார் 300 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. நாடு முழுவதும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளுக்கு காரணமான முதல் சம்பவத்தை நான் பாரபட்சமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த தொடர் கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல்கள், சொத்துக்கள் அழித்தல் உள்ளிட்ட இந்த கொடூரமான சம்பவங்களை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இச்சம்பவம் இடம்பெற்ற தருணத்திலிருந்து பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் பிரதானிகள், பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் மற்றும் பாதுகாப்புச் சபையின் பங்களிப்புடன் நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
இந்த நிலையில் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பு.
எனவே, கலவரக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை திட்டமிட்டு, ஆதரித்த மற்றும் விளம்பரப்படுத்திய அனைவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே இவ்வாறான நாசகார நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமக்கள் இதுவரை நடந்துள்ள உயிர் மற்றும் உடைமைச் சேதங்களை அவதானித்து, தொடர்ந்து வெறுப்பு உணர்வை பரப்பும் குழுக்களைக் கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படும் அதேவேளையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயற்படுவேன்.
தற்போதைய சூழ்நிலையை கட்டுப்படுத்தவும், நாடு அராஜகத்திற்கு ஆளாவதை தடுக்கவும், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறக்கூடிய மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க இந்த வாரம் நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
அதன்பிறகு, 19ஆவது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில், பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.
புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கு, புதிய வேலைத் திட்டத்தை முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் நாட்டை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அனைவருடனும் கலந்துரையாடி அதனை நோக்கிச் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இந்த இக்கட்டான தருணத்தில் நாடு வீழ்ச்சியடையாமல், மக்களின் உயிரையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அனைத்தையும் வழங்குவதற்கும் அரச செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் அமைதியாகவும், விவேகமாகவும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY