செறிந்து வந்த செய்திகள்

பிரதமர் அலுவலக செலவீனம் 50 வீதத்தால் குறைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைப்பதற்கு பிரதமர் அலுவலகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், செலவீனங்களை குறைத்து ஏனைய அரச நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என பிரதமர் தனது அலுவலக பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட 26 உத்தியோகத்தர்கள் தங்களது நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், 16 வாகனங்களும் மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப நேற்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் கூறியுள்ளது.


சபாநாயகரிடம் டிமான்ட் பண்ணும் எம். பி.கள் - எரிபொருள் இல்லையா , தங்க ஹோட்டல் வேண்டும்

எஸ் தில்லைநாதன்

வீடு திரும்புவதற்கு எரிபொருள் இல்லையென்றால் தங்குவதற்கு ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்து தருமாறு, சில எம்.பிக்கள் தம்மிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதுடன், சபாநாயகர் இவ்வாறு கோரிக்கை விடுத்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.


புதிய அமைச்சர்களுக்கு சம்பளமோ இல்லை!! குறைக்கப்படும் சிறப்புரிமைகள்

எஸ் தில்லைநாதன்

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்படமாட்டாது எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்படமாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.

அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் கூறினார்.

பிரதமர் அலுவலக செலவுகளை பாதியாக குறைக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எரிபொருளுக்கு நீண்ட வரிசை | லிட்ரோ நிறுவன அதிகாரிகள் மேல் விசாரணை!

எஸ் தில்லைநாதன்

யாழ்ப்பாண நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக மக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் நேற்று காலை முதல் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொள்கலன்களுடன் காத்திருந்தனர்.

லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளை பாராளுமன்றுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ளநிலையில் நேற்று முன் தினம் இரவு வரையில் பாரவூர்திகள் மூலம் அவை விநியோகிக்கப்படவில்லை.

எனவே அதிகாரிகளின் தாமதம் குறித்து விசாரணை செய்யவேண்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

எனவே கோப் குழுவின் தலைவர் இது தொடர்பில் எரிவாயு நிறுவன அதிகாரிகளை அழைத்து கருத்துக்களை அறியவேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை முழுமையாக நிவர்த்தி செய்ய இன்னும் ஒன்றரை மாதம் செலவிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் எழுப்பிய கேள்வியின்போதே ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

இதேவேளை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கவேண்டியுள்ளது.

இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


சஜித்துக்கு நன்றி கூறிய ரணில்

எஸ் தில்லைநாதன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது, அவர் சஜித் பிரேமதாஸவுக்கு நன்றி தெரிவித்தார்.

நாட்டின் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறைகளை நீக்கும் முகமாக நேற்று முன் தினம் பாராளுமன்றில் ரணில் விக்கிரமசிங்க, விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு முக்கிய மருந்துகளை பெற்று தருவதற்கு தமது கட்சி இணங்குவதாக சஜித் பிரேமதாஸ, நேற்று பாராளுமன்றில் அறிவித்தார்.

இதனையடுத்தே ரணில் ,சஜித்துக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்த மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உள்ள நிர்வாகச் சிக்கல்களை நீக்குமாறு சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை இந்த மருந்துக்களை பெற்றுக்கொள்ள ரூபாய்கள் உள்ளபோதும் டொலர்கள் தேவை என்ற பிரச்னை இருக்கிறது.

எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் மூலம் இந்த டொர்களை பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக இதனை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அதற்கான பணிப்புரைகளை தாம் தூதரகங்களுக்கு விடுப்பதாகவும் அறிவித்தார்.


மே 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கை- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

எஸ் தில்லைநாதன்

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், தேசிய சுகாதார சேவைகளை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், பிரச்னைகளை தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சாதகமான பதிலை வழங்கத் தவறினால் மே 25ஆம் திகதி சுகாதாரத் துறையின் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.


ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமையில்லை - சஜித் பிரேமதாஸ

எஸ் தில்லைநாதன்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய அவர், “இதுவரை ஊடக சுதந்திரம் இருந்தது. நாங்கள் அனைவரும் கமிட்டி அறைகளில் இருந்து வெளியே வந்து ஊடக அறிக்கைகளை கொடுத்துள்ளோம். என்னிடம் ஆதாரம் உள்ளது.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊடகவியலாளர்களிடமிருந்து தொலைபேசிகளை பறிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை.

நீங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றறிக்கைகளில் ஒன்றைக் காட்டி இதை மறைக்க வேண்டாம். இது முற்றிலும் தவறானது. தேவைப்பட்டால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு வந்து மன்னிப்பு கேட்டு இதை முடித்துக்கொள்ளலாம்.

எனவே, ஊடகவியலாளர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் கைகளைத் தொட எவருக்கும் உரிமை இல்லை என நான் கோருகின்றேன். ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. பிரதமருக்கு உரிமை இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட உரிமை இல்லை. 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த உரிமையும் இல்லை.
சுதந்திர ஊடகத்தை காப்பாற்ற நாம் பாடுபட வேண்டும். எனவே, இதை விதிமுறைகளால் மறைக்க வேண்டாம். தயவுசெய்து அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வந்து மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கள் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரினால் இரண்டு ஊடகவியலாளர்களின் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இரண்டு ஊடகவியலாளர்களும் பாராளுமன்றத்தில் செய்தி சேகரிக்க வந்ததாகவும், ஆனால் குழுக் கூட்டங்களின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல்களைப் பெறுவதற்கு சார்ஜண்டின் விசேட அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற போது அவ்வாறான விசேட அனுமதிப்பத்திரங்கள் இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் இல்லை எனவும், அவர்கள் அங்கீகரிக்கப்படாத இடத்தில் இருந்து பணியை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சபாநாயகர் மேலும் கூறினார்.

செறிந்து வந்த செய்திகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY