சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளை இனி ஆதரிக்க மாட்டோம்

சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளை இனி ஆதரிக்க மாட்டோம் என்ற சிறீதரன் எம். பியின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளையின் தலைவர் சட்டத்தரணி கே. வி. தவராஜா தெரிவித்துள்ளார்.

இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறிய இந்த விடயத்தை நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் - 2010ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக நான் கூறிக்கொண்டு வருகிறேன். கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கும்போது அந்த முடிவு அனைவராலும் சேர்ந்து எடுக்கப்பட வேண்டும். தலைவர் ஒரு முடிவு எடுத்தால் கூட கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும் கேட்கப்பட வேண்டும். அல்லது மத்திய குழுவில் உள்ள பாராளுமன்ற குழுவும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதனைத் தொடர்ச்சியாக, நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வருகின்றேன். தன்னிச்சையான முடிவுகளால்தான் தமிழ் அரசு கட்சி இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்பதற்கு காரணம். எந்த விடயத்தை எடுத்தாலும் தன்னிச்சையான முடிவு எடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்போதுதான் தமிழ் அரசு கட்சி நிலைத்து நிற்கும் என்று சிறீதரன் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன்.

ஒரு முடிவை எடுக்கும்போது பாராளுமன்றத்திலே ஆதரிப்பதா இல்லையா என்ற பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். ஆனால், பாராளுமன்ற குழுவில் அவ்வாறு முடிவு வராத நிலையில், சுமந்திரன் வாக்களிக்காமல் வெளியேறிச் சென்று விட்டார். ஆனால் இதே சுமந்திரன் ஒரு கட்டத்திலே கூறியிருந்தார் யாராவது வாக்களிக்காமல் செல்வார்களாக இருந்தால் - புறக்கணிப்பவர்களாக இருந்தால் - அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று. அன்றைய (22ஆவது திருத்த வாக்கெடுப்பு தின) செயல்பாட்டை பார்க்கும்போது அப்படி கூறிய சுமந்திரன் எதிர்த்து வாக்களிக்கவில்லை. முதுகெலும்பு இல்லாதவர்போல் செயல்பட்டு இருக்கின்றார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீழ்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இலங்கை தமிழ் அரசு கட்சி என்பது தனியார் நிறுவனமல்ல, மக்களின் கட்சி. தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து குந்தியிருக்கின்றோம் தவிர இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறி பல கட்சிகள் உருவாகியுள்ளன. ஒரு தனி நபரின் பிழையான செயல்பாட்டால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நீதியரசராக இருந்த சி. வி. விக்னேஸ்வரன் உட்பட பலர் சென்றிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு தடவையும் ஒரு தனி மனிதனின் செயல்பாட்டால் பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுகின்றது. அதாவது தமிழ் தேசியம் தேய்ந்து கொண்டு செல்கின்றது. இந்த தமிழ் தேசியம் தொடர்ந்து தேய்ந்து கொண்டு செல்லும் போது கட்சியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளை இனி ஆதரிக்க மாட்டோம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More