
posted 12th February 2023
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஷ் உட்பட 18 பேர் நேற்று சனி கைது செய்யப்பட்டனர்.
75ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (11) இடம்பெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்ராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)