
posted 12th May 2022

ஜி. ஸ்ரீநேசன்
அரசியல் இலாபத்திற்காக சிங்கள பெளத்த அடிப்படைவாதத்தால் இலங்கை சீரழிக்கப்பட்டது. இவ்வாறு முன்னாள் மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
நீர்வளம், நிலவளம், கனியவளம், வனவளம் என்று பல வளங்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட எமது நாடு இன்று கடனால் சூழப்பட்ட நாடாக ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாரப் பசிக்காகவும், ஆட்சிப்பீட செளகரியங்களுக்காகவும், தேர்தல் வெற்றிக்காகவும், சிங்கள, பெளத்த, அடிப்படைவாதம் என்னும் விஷ வித்துக்களை இந்த நாட்டில் அரசியல்வாதிகள் விதைத்தார்கள். அந்த விதைகள் இன்று இனவாத, மதவாத, மொழிவாத விஷ விருட்சங்களாக கிளை பரப்பி வளர்ந்து விட்டன. அந்த விருட்சங்களின் கீழிருந்து இனவாதிகள் அரசியல் செய்கிறார்கள். அதன் விளைவால் நாடு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக எதிர்மறையான விளைவுகளை தந்து கொண்டிருக்கின்றது.
சமூக ரீதியாகப் பார்த்தால் சிங்கள, தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இலங்கையர் என்ற தேசியவாத ஒற்றுமை சிதைக்கப்பட்டுள்ளது. சிங்கள மேலாதிக்கமானது சிறுபான்மைத் தமிழ் பேசும் இனங்களை அடக்குவதில், ஒடுக்குவதில் குறியாக இருக்கின்றது. இதனால் சிங்களர், தமிழர், முஸ்லிங்கள் இடையே முரண்பாடுகள், பகைகள், இன வன்மங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாகப் பார்த்தால், சிங்கள அரசியல்வாதிகள், பெளத்த மதகுருமார்கள் அவர்களது ஆதரவாளர்கள் தம்மை ஆளுகின்ற இனம் என்றும் தமிழ் பேசும் மக்களை ஆளப்பட வேண்டிய இனங்கள் என்றும் நினைக்கின்றார்கள்.
அந்த வகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த 1947.02.04இல் இருந்து இன்றுவரை சட்ட ரீதியாகவும், சட்டவிரோத செயற்பாடுகள் ரீதியாகவும் தமிழ் பேசும் மக்களை ஒடுக்குவதிலும், அவர்களை நாட்டை விட்டுத் துரத்துவதிலும் திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளார்கள். 1948, 1949 களில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், வாக்குரிமைச்சட்டம் என்பன இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்குரிமை குடியுரிமை என்கின்ற அரசியல் குடியியல் உரிமைகளைப் பறித்து 5 இலட்சம் மக்களை நாடற்ற அநாதைகளாக்கியது. இந்த இனவொதுக்கல் சட்டத்திற்கு இலங்கைத் தமிழ் காங்கிரசின தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ஆதரவு அளித்தமை ஒரு வரலாற்றுத்தப்பாக அமைந்தது. இதனை எதிர்த்த எஸ். ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் 1949 இல், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கி வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் மலையகத் தமிழர்க்கும் ஆதரவுக் கரத்தினை நீட்டினார். சிங்கள இனவாதிகளால், இனவன்முறைகளால் மலையகத் தமிழர்கள் தாக்கப்படுகின்ற வேளைகளில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் அவர்களைத் தமது வாழ்விடங்களுக்கு வரவேற்றனர். குடியமர உதவினர். மலையகத் தமிழர்களும் எமது உறவினர் என்ற கொள்கையை தந்தை செல்வா கடைப்பிடித்தார்.
கல்லோயா, கந்தளாய், சேருவில, வெலிஓயா போன்ற சிங்களக் குடியேற்றங்கள், வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாழ்விடங்களையே ஆக்கிரமிக்கும் நகர்த்தல், கெடுபிடிசக்திகளாக அமைந்தன. தென்பகுதியிலுள்ள தமிழர்களின் பொருளாதார மையங்கள், சொத்துக்களை இனக்கலவரம் என்ற போர்வையில் கொள்ளையிடல், தீ வைத்தல் என்கின்ற வன்மச்செயல்களை பேரினவாதக் குண்டர்கள் செய்தார்கள். இதன் மூலமாக தென்பகுதியிலுள்ள தமிழர்களின் இருப்புகளையும், அவர்களது பொருளாதார பலத்தையும் அடிப்படைவாதக் குண்டர்கள் அழித்தார்கள். அதேவேளை தமிழர்தனின் வாழ்விடம் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்கள் மட்டுந்தான் என்பதை மறைமுகமாக இனவாதிகள் அடையாளப்படுத்தினர்.
அதே வேளை சிங்கள நகர்த்தல் குடியேற்றங்கள் மூலமாக வடக்கையும், கிழக்கையும் படிப்படியாக ஆக்கிரமிக்க ஆட்சியாளார்கள் திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தினர். இதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வன இலாகத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன பக்கபலமாக இருந்தன.
மேலும் காலத்திற்குக் காலம் மறைமுகமாகத் திட்டமிட்டு இன வன்முறைகளை உருவாக்கி தமிழர்களை இனவழிப்பு, இனச்சுத் திகரிப்புச் செய்யும் செயற்பாடுகளும் நடைபெற்றன. 1956, 1983 போன்ற இனவழிப்புகளால் தமிழர்களின் உயிர், உடைமைகள் பறிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. இதனால் உள்நாட்டிலும், அயல் நாடுகளிலும் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இதனோடு சிறந்த மனித வளங்களான தமிழ் புத்தி ஜீவிகளும் நாட்டை விட்டுப புலம் பெயர்ந்தனர். தமது புத்தி பலத்தால் சமூக, பொருளாதார, அரசியல், அறிவியல், தொழில் நுட்ப அபிவிருத்திகளை தாய்நாட்டில் செய்ய வேண்டிய மனித வளங்கள் அந்நிய தேசங்களுக்கு துரத்தப்பட்டன. இதனால் அந்நிய நாடுகள் அவர்களை நன்கு பயன்படுத்திக் கொண்டன.
தமிழ் மாணவர்களின் உயர் கல்வியைத் தடுப்பதற்காக பல்கலைக்கழக நுழைவில் தரப்படுத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்யுங்கள், நில அபகரிப்புகள், கலாசார அழிப்புகள், இனவாத அடக்குமுறைகள், இன அழிப்புகள், தனிச்சிங்களச் சட்டம், அரச மதம், பெளத்தம் என்ற ஏற்பாடு, தமிழ்மொழி புறக்கணிப்புகள், அபிவிருத்தி தொழில்வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு, யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டுக் கொலை, தமிழர்களின் ஜனநாயக வழியிலான சாத்வீகப் போராட்டங்கள் மூலமாக இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்படாமை, பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தாமை போன்ற பல காரணங்களால் இளைஞர்கள் ஆயுதவழிப் போராட்டங்களில் குதிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் வழிவகுத்தனர். 30 வருட கால தமிழர்களின் அகிம்சை வழிப் போராட்டம் தோற்றதால் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்திப் போராடும் நிலை ஏற்பட்டது.
இந்த யுத்தம் 30 ஆண்டுகள் உக்கிரமாக நடைபெற்றது. இந்த யுத்தத்தால் நாட்டின் மனித வளம், நிதிவளம், பொருளாதாரவளம், காலவளம், புலமையாளர்வளம் யாவும் நாசமாக்கப்பட்டன. பிறநாடுகளிடம் கடன்பட்டுக் கையேந்தி ஆட்சியாளர் வர்க்கம் யுத்தம் செய்தது . சகோதரர்களாகத் கைகோர்த்து இலங்கையைக் கட்டி எழுப்ப வேண்டிய சிங்கள தமிழ் இளைஞர்கள் எதிரும் புதிருமாக நின்று ஏட்டிக்குப் போட்டியாக ரணகளத்தில் சந்தித்தனர்.
ஏழைத் தாய்மார் பெற்ற சிங்கள தமிழ் பிள்ளைகள் யுத்தகளத்தில் ஆகுதிகளாக்கப்பட்டனர். ஆளும் அதிகார வர்க்கம், முதலாளித்துவ வர்க்கம் தமக்கு எதிராகத் திரும்ப வேண்டிய ஏழைத்தொழிலாளர் வர்க்கத்தினை இன, மதவாதம் என்னும் போதை வெறியை ஊட்டி எதிரும் புதிருமாக மோதவைத்து அழியவிட்டார்கள். தமது முதலாளித்துவ அதிகார வர்க்கத்தை பரம்பரை பரம்பரையாக சௌகரியமாக ஆளவும், வாழவும் செய்தார்கள். இனவாதத்தை பாய்ச்சுவது அதிகார வர்க்கம், அதனால் அழிவது ஏழைகளான சிங்கள தமிழ் முஸ்லிம் வர்க்கத்தினர் என்பது இந்நாட்டின் வங்குரோத்து அரசியல் வரலாறாயிற்று. சுதந்திரத்தின் பின்னர் சிங்கள அதிகார வர்க்கத்தினர் அரசியலை இலாபமீட்டும் வியாபாரத் தொழிலாகவும் அமைத்துக் கொண்டனர். கொள்வனவுகள், கொந்துராத்துகள், தொழில் வாய்ப்புகளில் ஊழல்கள், மோசடிகள், கையூட்டுகள் மூலமாக மில்லியனராகி பில்லியனர் திருல்லியனர்களாக மாறினர். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கறுப்புப் பணங்கள் மூலமாக நாட்டையும், மக்களையும் சுரண்டியும், கொள்ளையடித்தும் சொத்துக்களைப் பெருக்கிக்கொண்டனர். 30 வருடகால யுத்தம்கூட அரசியலில் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் கொள்ளை இலாபங்களை ஆட்சியளர்களுக்கு ஈட்டிக்கொடுத்தன. யுத்த தளபாடங்கள், விமானங்கள், கப்பல்களின் கொள்வனவின் போது பல மில்லியன், பில்லியன் ரூபாய்கள், டொலர்களை அரசியல்வாதிகள் உழைத்ததாகத் தகவல்கள் வெளிவந்தன. நாட்டின் நிருமாண ஒப்ந்தங்களின் போது உயர்மட்ட அரசியலில் இருந்து கீழ்மட்டம் வரை கையூட்டுகள், கைவரிசை காட்டின். இதனால் ஒப்பந்த நிருமாணப் பணிகள் தரங்கெட்டு குறுகிய காலத்தில் காலாவதியாகின.
மொத்ததிதில் சிங்கள பௌத்த இன, மத வாதங்களால் சிங்கள மக்களின் கண்களை கட்டிவைத்துவிட்டு 74 ஆண்டுகளாய் சமூக பொருளாதார அரசியல் ரீதியாக நாட்டை குட்டிசுவராக்கிய செயற்பாடுகளையே ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். இனவாதத்தால், தேசிய ஐக்கியம் ஒருமைப்பாட்டினை கூறு போட்டதன் விளைவினை இந்த நாட்டு மக்கள் இப்போது உச்சளவில் அனுபவிக்கிறார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் இதனை உணர்ந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் இக்கொடுமைகளின் உக்கிரத்தை உள்நாட்டு யுத்தகாலத்தில் அனுபவித்திருந்தனர். பேரினவாதிகள் விதைத்த இனவாத அறுவடைகளை அவர்கள்தானே அறுவடை செய்ய் வேண்டும். அப்படியான ஆட்சியாளர்களைத் தெரிவு செய்த குற்றத்திற்காக ஆதரவளித்த மக்கள் மட்டுமல்லாமல், ஆதரவளிக்காத மக்களும் கஷ்டங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இனப்பிரச்சினை எப்போதோ தீர்ககப்பட்டிருந்தால் தேசிய ஐக்கியம், அரசியல் ஸ்திரம், பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை எமது நாடு அடைந்திருக்கும்.
மாறாக இனவாதத்தை விதைத்து இனப்பிரச்சினையை அரசியல் முதலீட்டாக்கியதன் விளைவை எமது நாடு அனுபவிக்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி முறை மூலமாகப் பெறப்படுமாயின், புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகள் மூலமாக நாட்டை விரைவாகக் கட்டியெழுப்ப முடியும். அந்த ஞானம் எந்த சிங்களத் தலைவருக்குத்தான் வரப்போகிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House