
posted 1st December 2022
அருட்பணி. ச. யேசுதாசன் அடிகளார் கடந்த 25.11.2022 அன்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி ஏ.எஸ். ஹிபதுல்லா முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
மன்னார் வஞ்சியன்குளம் என்னும் இடத்தை சேர்ந்த இவர் ஆன்மீகப் பணி கல்விப் பணி சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் ஓர் கிளரேசியன் சபை துறவியும் ஆவார்.
திரு. திருமதி. சவிரி ஞானப்பு தம்பதிகளின் புதல்வரான இவர் தனது ஆரம்பக் கல்வியை மன். வஞ்சியன்குளம் றோ.க.த.க. பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை மன்.இலகடிப்பிட்டி றோ.க.த.க.பாடசாலையிலும் உயர்கல்வியை நீர்/தோப்பு ம. வித்தியாலயத்திலும் கற்றார்.
மெய்யியல் மற்றும் இறையியல் கற்கை நெறிகளை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்திலும் கற்றார்.
அருட்பணியாளராக தூய மரியன்னை பேராலயம் - பதுளை, தூய பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் - அளிக்கம்பை மட்டக்களப்பு, இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
'இரகசிய விசாரணை' என்னும் கவிதை நூலையும், மாணவர்களுக்கான பல நூல்களையும் எழுதிய இவர் சாமசிறி தேசகீர்த்தி என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளார்.
தற்போது தெனியாய என்சல்வத்த மருத மடு அன்னை ஆலயத்தில் உதவிப் பங்குத் தந்தையாகவும் தெ/மாமாறை/என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளாராகவும் பணி புரிகிறார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)