
posted 16th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கொக்குத்தொடுவாய் புதைகுழி; அகழ்வு பணி நிறைவடைந்தது
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றுடன் திங்கள் (15) முடிவுக்கு வந்தன. அங்கு, கண்டறியப்பட்ட அனைத்து (52) மனித எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டமையை அடுத்து இந்தப் பணி நிறைவடைந்தாகவும், இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாளான நேற்று (15) பணிகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு சட்டமருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தவை வருமாறு;
“நேற்றுடன் இந்த மனிதப் புதைகுழியிலிருந்த மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. 52 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், துப்பாக்கிச் சன்னம், திறப்பு கோர்வை என்பனவும் கண்டெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தாலும் அடுத்துவரும் நாட்களில் இந்த புதைகுழி தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும்” என்று கூறினார்.
நேற்றைய 10ஆம் நாள் அகழ்வு பணிகளும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நடைபெற்றிருந்தன. மூன்றாம்கட்ட அகழ்வில் 12 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. முன்னதாக இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் தண்ணீர் குழாய் பொருத்துவதற்காக நிலத்தை வெட்டியபோது இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 6ஆம் திகதி இது மனிதப் புதைகுழி என முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி முன்னிலையில் தோண்டப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்ரெம்பர் 6ஆம் திகதி முதல் கட்ட அகழ்வுப் பணி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்கதக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)