
posted 14th January 2023
இந்த உள்ளுராட்சித் தேர்தலானது பல அரசியல் அமைப்புக்களின் திருத்தத்தோடு வந்திருக்க வேண்டும். இந்த தேர்தல் முறையானது மக்கள் மத்தியில் பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. சபையில் வரவு செலவு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலையும் உள்ளது. இதனால் ஒரு யுக்தியின் மூலம் வெற்றிப்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்து செயல்படவே தமிழரசுக் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலைப்பாடு தொடர்பாக மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பது தொடர்பாக வியாழக்கிழமை (12) மன்னார் தமிழரசுக் கட்சி கிளை காரியாலயதத்தில் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி. பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தொடர்ந்து தெரிவிக்கையில்;
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் மன்னாருக்கு வருகை தந்திருந்தேன்.
நான் முதலில் தெரிவிப்பது புத்தாண்டு பிறந்துள்ளது. அத்துடன் பொங்கல் திருவிழாவும் வருகின்றது. அனைத்துக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இங்குள்ள எங்கள் கட்சி சார்ந்தவர்களிடம் எங்கள் கட்சியின் நிலைப்பாடு, எமது பொறுப்பு என்னவென்று தெளிவுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்த உள்ளுராட்சித் தேர்தலானது பல அரசியல் அமைப்புக்களின் திருத்தத்தோடு வந்திருக்க வேண்டும். இந்த தேர்தல் முறையானது மக்கள் மத்தியில் பல குறைபாடுகளுடனும் சபையில் வரவு செலவு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
உள்ளுராட்சி மன்றங்களில் ஆளும் தரப்பைவிட எதிர் தரப்பினர் அதிகமாக இருப்பதால் ஒரு ஆட்சியை நடத்துவதில் பல சவால்கள் நிறைந்துள்ளன.
இதில் மாற்றங்கள் வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தபொழுதும் இதற்கான திருத்தங்கள் வரவில்லை.
இப்பொழுது தமிழரசுக் கட்சியைப் பொறுத்தமட்டில் இத் தேர்தல் தொடர்பாக பல சாதகமானதும், பாதகமானதுமான குரல்கள் எழுப்பப்பட்டதனால் செயற்குழுவில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டியதாயிற்று.
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தபொழுதும் பெற்ற அனுபவங்களைக் கொண்டு தமிழரசுக் கட்சி ஒரு புதிய அனுபவத்தின் மூலம் வெற்றி பெறுவதற்கு நடைமுறை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பக்குள் இருக்கின்ற ரெலோ மற்றும் புளெட் கட்சிகளுடன் நாங்கள் விவாதித்திருக்கின்றோம்.
நாங்கள் எடுத்திருக்கும் தீர்மானம் ஒரு பரிசோதனையாகவும் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கும்.
நாங்கள் போட்டியிடும்போது எங்களுக்குள் போட்டியில்லாத நிலையில் வாக்குகளைப் பெற்று பின் நாங்கள் ஒன்றித்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முனைவோம்.
அரசியல் தீர்வுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத நிலையில் எமக்குள் ஒற்றுமையை இலக்காக வைத்தே இத் தேர்தலை நாம் அணுக வேண்டும்.
நாம் தனிமையில் போட்டியிட்டாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள யாவரும் ஒன்றித்த நிலையிலேயே இத் தேர்தலைச் சந்திக்கின்றோம்.
ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
ஆட்சிக்காக நாங்கள் பிரிந்து செல்லவில்லை. மாறாக, இந்த தேர்தல் முறையால் நாம் அதிக வாக்குளைப் பெற்றாலும் ஆழும் தரப்பைவிட எதிர் அணியில் இருப்பவர்களின் பிரநிநிதித்துவம் அதிகமாக காணப்படுவதால்தான் ஒரு யுக்தியை கையாளுகின்றோம். நாங்கள் தேசிய கூட்டமைப்பாகவே தொடர்ந்து செயல்படுவோம்.
கேள்வி: தேசிய கூட்டமைப்பு கட்சியின் ஏனைய கட்சிகள் மற்றறைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயல்படும் நிலை ஒன்று உருவாகினால் உங்கள் எண்ணம் ஒத்துவருமா?
பதில்: நிச்சயம் அதுவும் நடக்கலாம் இருந்தும். எமது எண்ணம் தமிழர் உரிமைகளை பெறுவதே நோக்காக இருக்கும், இருக்க வேண்டும். ஏனைய தமிழ் கட்சிகளும் அந்த நோக்குடனே செயல்படுகின்றனர் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)