கல்முனை சந்தான்கேணியில் தனியார் ஆக்கிரமிப்பை தடுக்க அவசர நடவடிக்கை

கல்முனை சந்தான்கேணியில் தனியார் ஆக்கிரமிப்பை தடுக்க அவசர நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருக்கின்றது. கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானக் காணியில் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட ஆலோசனைக் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம். நிஸார், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே. ஹலீம் ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதான எல்லைகளில் இடம்பெறும் அத்துமீறல்கள், அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் போன்ற விடயங்களை தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இம்மைதானக் காணியின் எல்லைப்பகுதிகளில் கடந்த 25 வருடங்களுக்கு மேலான காலப் பகுதிகளில் தனி நபர்களின் அத்துமீறல்கள் காரணமாக அதன் பரப்பளவானது குறிப்பிடத்தக்களவு குறைவடைந்திருப்பதாகவும், இயற்கையாக நீர் வடிந்தோடும் கால்வாய் கூட அடைக்கப்பட்டிருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

காலாகாலமாக மிகவும் சூட்சகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்துள்ள மைதானக் காணியின் எல்லைப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மிகவும் இறுக்கமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கின்ற நபர்களை விரைவாக கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்து, தேவையான அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்குவதற்கும் இணக்கப்பாட்டுக்கு முன்வரத் தவறுகின்ற ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களும் விளையாட்டுத்துறை முக்கியஸ்தர்களுமான பெஸ்டர் றியாஸ், எம்.ஐ.எம். அப்துல் மனாப் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர்.

மைதான விடயத்தில் கரிசனையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற மாநகர முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இந்நடவடிக்கைகளில் தளர்வுகள் ஏற்பட இடமளிக்காமல் உறுதியாக நின்று, எதிர்கால சந்ததியினருக்காக இம்மைதானத்தை பாதுகாத்துக் கொடுப்பதற்கு தொடர்ந்தும் முன்னிற்க வேண்டும் எனவும் இதன் போது பெஸ்டர் றியாஸ் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். இதற்காக விளையாட்டுக் கழகங்கள் அனைத்தும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராகவிருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, விளையாட்டு மைதானத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மாநகர முதல்வரும், அதிகாரிகளும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளும் நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகர முதல்வர் வழங்கியுள்ளார்.

கல்முனை சந்தான்கேணியில் தனியார் ஆக்கிரமிப்பை தடுக்க அவசர நடவடிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More