
posted 26th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை கடல் சுற்றாடல் கழிவு முகாமைத்துவ கலந்துரையாடல்
கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லைக்குட்பட்ட கடல் சுற்றாடலின் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் மாநகர சபையில் நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸின் அறிவுறுத்தலின் பிரகாரம் மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீமின் நெறிப்படுத்தலில் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவி முகாமையாளர் கே. சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கடல் மற்றும் கடலோர பிரதேசங்களின் சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுதலாக காணப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இயங்கி வருகின்ற தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள், அதனால் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதனை முகாமைத்துவம் செய்வதில் காணப்படுகின்ற சவால்கள் அதற்கான தீர்வுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், அடுத்த கூட்டத்தில் இதற்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வெதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மத்திய சுற்றாடல் அதிகார சபை, கல்முனை பிரதேச செயலகம், கரையோரம் பேணல் திணைக்களம் அத்துடன் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ், கடற்படை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் என பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)