
posted 27th May 2022
பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் என இலங்கைக்காகன சீனத் தூதுவர் ஷீ ஜன்ஹொங் தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசின் இலங்கைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் மற்றும் உதைப்பாந்தாட்ட கழகங்களுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (26) மாலை கல்முனை ஆஷாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேஷன் ஏற்பாட்டில் அதன் இணைத் தவிசாளர் ஏ.ஜி.எம். அன்வர் நௌசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சீனத் தூதுவரின் பாரியார் ஜின் ஜியாங், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மதநாயக்க ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
அங்கு தூதுவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கை ஒரு சிறந்த வளமிக்க நாடாகும். எமது சீனக்குடியரசும், இலங்கையும் மிக நீண்ட காலமாக நட்புறவு நாடுகளாக இருந்து வருகின்றன. எமது நாடு, இலங்கைக்கு எப்போதுமே மனிதாபிமான உதவிகளை வழங்கி வந்திருக்கிறது. தற்போது உங்கள் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பங்களிப்பு செய்து வருகின்றது. அதனை இன்னும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
பொருளாதார நெருக்கடியினால் நீங்கள் பசியுடன் இருப்பதை என்னால் உணர முடிகிறது. எமக்கு இனம், மதம், மொழி முக்கியமல்ல. மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தியே உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த வருட இறுதிக்குள் மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சீன மக்கள் குடியரசு தயாராக இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த மண்ணில் இருந்து உங்கள் முன்னிலையில் வெளிப்படுத்துகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை முதல்வர் ஏ.எம். றகீப் விசேட உரை நிகழ்த்தியதுடன் கல்முனை மாநகர மக்கள் சார்பில் சீனத் தூதுவரை பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.
கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், சீன தூதரக உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY