கலவரங்களினால் ஆளும் கட்சியினரின் சொத்துக்கள் தீக்கிரை - ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று திங்கட்கிழமை பகல் தொடங்கிய வன்முறையை தொடர்ந்து தென்னிலங்கை முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ளன. அரச தரப்புமீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக போராட்டக்காரர்கள் ஆளும் தரப்பினரின் வீடுகள், அலுவலகங்களை தீயிட்டு எரித்துள்ளனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட நிலையில், அதனை மீறி இரவிரவாக போராட்டக்காரர்கள் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டபோதும் வன்முறைகளை தடுக்க முடியவில்லை என்று தென்னிலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேசமயம், ஆளும் தரப்பை சேர்ந்தவர்களின் இல்லங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களை தேடிச் சென்று தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அத்துடன், அவர்களை தேடியும் வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர். 15இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. நிட்டம்புவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று வீரகெட்டிய பிரதேச சபை தவிசாளரின்வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோதும் அதனை மீறி போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நேற்றிரவு மீண்டும் அலரி மாளிகைப் பகுதியில் கூடிய போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். அங்குநின்ற வாகனங்கள் எரியூட்டி அழிக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி போராடியவர்களை கலைத்தனர் என்றும் தெரிய வருகின்றது.

இந்தச் செய்தி அச்சுக்குப் போகும்வரை தென்னிலங்கையில் கலவரங்கள் - பதற்றங்கள் தணியவில்லை. பல்வேறு குழுக்கள் அந்தந்தப் பகுதிகளிலுள்ள ஆளும் தரப்பினரை தாக்கி வருகின்றனர். அத்துடன், அவர்களுக்கு சொந்தமான சொத்துக்களையும் அழித்து வருகின்றனர். இதனால், வன்முறை இழப்புகள் இன்று காலை மேலும் அதிகரித்திருக்கக்கூடிய அச்சநிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலவரங்களினால் ஆளும் கட்சியினரின் சொத்துக்கள் தீக்கிரை - ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)