
posted 23rd May 2022
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் ஞாயிற்றுக்கிழமை [22] காலமானார்.
தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன் இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருது பெற்றவர்.
1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள பொலிகண்டி, கொற்றாவத்தை கிராமத்தில் பிறந்தவர். தொழில் ரீதியில் தமிழ் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலயம் அரச பாடசாலையாக அங்கீகாரம் பெற்றபோது தலைமை ஆசிரியர் உயர்வுப் பொறுப்புப் பெற்றவர், தொடர்ச்சியில் பகுதித்தலைவர், கனிஸ்ட அதிபர், உபஅதிபர், தொலைக்கல்விப் போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002ம் ஆண்டு தேவரையாளி ஓய்வு பெற்றவர்.
முற்போக்கு எழுத்து அணியை சேர்ந்தவர். 1964ல் ‘விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ என்ற சிறுகதையுடன் இவரது எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானது.
சுமார் 150 சிறுகதைகள், 10 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என்பன இவரது படைப்பாக்கங்கள்.
இவரது வாழ்நாள் இலக்கியப்பணிக்காக இலங்கை அரசு ‘சாகித்யரத்னா’ (2013), வடக்கு மாகாண ‘ஆளுனர் விருது’ (2008), இலங்கை இந்து கலாசார அமைச்சு ‘கலாபூஷணம்’ (2003) போன்ற விருதுகளை வழங்கி இவரைக் கௌரவித்துள்ளது.
இவரது ‘கழுகுகள்’ நாவல், ‘தகவம்’ பரிசையும், ‘மரக்கொக்கு’ நாவல் இலங்கை அரசினதும், வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும், ‘காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதையும், ‘குடிமைகள்’ நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதையும், ‘சிதைவுகள்’ குறு நாவல் தேசிய கலை இலக்கியப் பேரவை பரிசையும், சுபமங்களா பரிசையும், ‘சின்னப்பபாரதி’ அறக்கட்டளை விருதையும், ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத் தொகுதி கொடகே விருதையும் பெற்றுள்ளன.
சிறந்த மேடைப் பேச்சாளரான இவர், இளவயதிலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தளகர்த்த அங்கம் வகித்த நாளில் சங்கத்தின் யாழ் கிளைச் செயலாளர் பொறுப்பினை வகித்தவர். சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்ட ஒரு சமூக விடுதலைப் போராளி.
ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான சமுதாயமே அவரது இலட்சியமாக இருந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY