
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 16 பேர் படகுடன் கைது
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் 8 படகுகளுடன் நேற்று (12) புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களான அட்டை பிடித்தல், ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
கட்டைக்காட்டிலிருந்து 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்த வேளை நேற்று புதன் கிழமை காலை 8 படகுகளுடன் குறித்த 16 பேரும் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சிலரைக் கடற்படை கடலில் வைத்து விடுவித்துள்ளதாக நேரில் பார்த்த சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் துணிவாக நேற்றும் சட்டவிரோத மீன்பிடிக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்து இலஞ்சம் கொடுத்து தொழில் புரிவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)