
posted 16th January 2023
“முன்பள்ளிப் பாடசாலை ஆசிரியைகளின் சேவை, தியாக சிந்தையுடன் கூடிய உன்னத சேவையாகும். இப்பணியில் ஈடுபடும் ஆசிரியைகளை நாம் கௌரவப்படுத்த வேண்டும் என்று திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். பைஸால் காசிம் கூறினார்.
நிந்தவூர் அல்-ஹுதா முன்பள்ளி (பாலர்) பாடசாலையின் 2022 ஆம் ஆண்டுக்கான விடுகை விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை முதன்மை ஆசிரியை திருமதி. சபூறா ஹஸன் தலைமையில் நிந்தவூர் அல் - பதுரியா வித்தியாலய மண்டபத்தில் விழா நடைபெற்றது.
விழாவில் தொழிலழிபரும், சமூக செயற்பாட்டாளருமான பி.ரி. ஹஸன் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டதுடன், கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். றசீன், பாலர் பாடசாலைகளின் கள இணைப்பாளர் ஐ.எல்.எம். அனிஸ், உட்பட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிமட் தொடர்நது விழாவில் உரையாற்றுகையில்,
“முன்பள்ளிப்பாடசாலைகளின் அவசியமும், முக்கியத்துவமும் சமூகத்தில் உணரப்பட்டுள்ளது. பிஞ்சுக் குழந்தைகளைப் பக்குவமாகப் பராமரித்து மழலைகளை நெறிப்படுத்தும் பணி உன்னதமானதாகும். இப்பணியைத் தியாகத்துடனும், சேவை மனப்பாங்குடனும் முன்னெடுத்துவரும் ஆசிரியைகள் விதந்து பாராட்ட வேண்டியவர்கள்” என்றார்.
பாடசாலைப் பாலர்களின் கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும், பரிசுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)