இப்போது தமிழ் அரசியல் நிலைப்பாட்டைச் சிந்திக்க வேண்டும்

தெற்கில் புதிய அரசியல் கலாசாரம் உருவெடுப்பது போல் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் தங்கள் செயற்பாட்டை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். உருப்படாத உணர்ச்சிகரமான வார்த்தைகளை பேசி, தமிழ் மக்களை உசுப்பேற்றி, உண்மையின் நிழல்படாத பொய்யை உரத்துப்பேசி, காலத்தை வீணாக்கியதை தவிர இவர்களின் சாதனை வெறும் பூச்சியமே என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவகரன் இன்றைய சமகால நிகழ்வை முன்னிருத்தி ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

அமைதி வழி போராட்டத்தை அரசியல் பின்புலத்துடன் அரச இயந்திரத்தின் ஒத்திசைவுடன் நசுக்க முனைவது சனநாயக படுகொலை ஆகும். இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் ஆழ்ந்த கவலையடைகிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அரசியல் அமைப்பின் பிரகாரம் சனநாயக உரிமை பண்பியல்புகளுக்கு மதிப்பளித்து முதன்மைப்படுத்த வேண்டியது தார்மீக பொறுப்பும் அடிப்படை உரிமையும் ஆகும்.

இந்த மரபை காக்க வேண்டியதே ஆட்சியாளரின் இரகசியப் பிரமாணமும் ஆகும். அவ்விதமான நெறி முறையை அவமதிப்பது சமநீதியின்மையற்ற செயலில் ஈடுபட்டது பெரும் தேச விரோத குற்றமாகும்.

வன்முறையின் வலிகளை நன்கு உணர்ந்தவர்கள் என்றவகையில் முன்னெச்சரிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ள முனைவதே சிறந்த சனநாயக தலைமைத்துவ பண்பியலாகும்.

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி மக்களை ஒடுக்க முனைவதும், முப்படைகளுக்கும் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் சனநாயக நாட்டிற்கு உகந்தவை அல்ல.

பொருளாதார நலிவடைவில் இருந்து நாட்டை மீட்சியடைய வழி தேடுவதை விடுத்து வன்முறையை ஆயுதமாக்குவது மேலும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு நலிவடையும். இதை ஆட்சியாளர்கள் புரியாமல் இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

யுத்த வெற்றியின் யுக புருசர்கள் என கொண்டாடிய இதே பெளத்த தேசியவாத இனவாதிகள் அதே மே மாதத்தில் கூட்டுக் கோபத்தை உச்ச பட்சமாக வெளிப்படுத்துவது 'ஆறிநின்றது அறனன்று' என்பதை புலப்படுத்துகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. இந்த போராட்டக்காரர்கள் தமிழர்களின் எந்த விதமான அடிப்படைக் கோரிக்கையும் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள்.

போர்க் குற்றவாளிகளுக்கு இது தண்டனை ஆகாது. நாம் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் துளியளவும் இதில் மகிழ்வடைய முடியாது. இது அவர்களுடைய உள்ளக அரசியல் பிரச்சினை. இதை நாம் மூன்றாம் தரப்பாகவே மிகத்தந்திரமான மதிநுட்பத்துடன் கையாள வேண்டும்.

எனவே தெற்கில் புதிய அரசியல் கலாசாரம் உருவெடுப்பது போல், தமிழ் அரசியல் வாதிகளுக்கும் தங்கள் செயற்பாட்டை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். உருப்படாத உணர்ச்சிகரமான வார்த்தைகளை பேசி தமிழ் மக்களை உசுப்பேற்றி உண்மையின் நிழல்படாத பொய்யை உரத்துப்பேசி காலத்தை வீணாக்கியதை தவிர இவர்களின் சாதனை வெறும் பூச்சியமே என பொது மக்கள் விசனமடைகின்றனர்.

தூரநோக்கு இலக்கின்றி, இராஜதந்திர இராஜீக அணுகுமுறையின்றி, வெறும் வாக்கு வணிக வாய்ச் சொல்லில் வீரர்களாகவே காணப்படுவதுடன், தமிழ் மக்களின் பொது நலன் சார்ந்து இந்த இக்கட்டான நிலையில் கூட ஐக்கியப்படாமல் ஆளுக்கு ஒரு அறிக்கை விட்டு அநாகரீக அரசியலில் ஈடுபடுகிறார்கள். ஆகவே தமிழ் மக்களும் புதிய அரசியல் காலாசாரத்தை கட்டமைக்க நகரவேண்டிய காலம் கைகூடி வருவதாகவே தோன்றுகிறது.

ஆகவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ்மக்கள் உணர்ச்சி வசப்படாமல் மிக மிக நிதானமாக கூர்ந்து கவனித்து மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏனெனில் பல முறை இனக்கலவரம், இனப்படுகொலை என்பனவற்றில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால், அந்த அனுபவத்தில் இருந்தே எமது முன்னோக்கிய நகர்வு கட்டமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என சிவகரன் தெரிவித்துள்ளார்.

இப்போது தமிழ் அரசியல் நிலைப்பாட்டைச் சிந்திக்க வேண்டும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House