
posted 2nd May 2022
ஆள்கடத்தலில் அகப்பட்டோர் விளக்க மறியலில்
திருகோணமாலையை சேர்ந்த 11 பேரை தமிழகத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற படகோட்டிகள் இருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலாலி, அன்ரனிபுரத்தை சேர்ந்த படகோட்டிகளே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருகோணமலையை சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள், 5 சிறுவர்களை பலாலி கடற்பரப்பு ஊடாக தமிழகம் நோக்கி படகில் பயணித்திருந்தனர்.
அந்த சமயம் கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன், அவர்களின் படகையும் வெளியிணைப்பு இயந்திரம், எரிபொருள் என்பவற்றையும் கைப்பற்றினர்.
கைதான 13 பேரையும் சட்ட நடவடிக்கைகாக பலாலி பொலிஸாரிடம் கடற்படை ஒப்படைத்தது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர். அத்துடன், சான்று பொருட்களையும் மன்றில் பாரப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிவான், படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன், ஏனை 11 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன், இந்த வழக்கை 12ஆம் திகதிக்கும் ஒத்திவைத்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு - நுகர்வோர் பாதிப்பு
எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் வடக்கு மாகாணத்தில் கடல் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய கடற்பரப்புகளில் நாளாந்தம் மீன்பிடித்தல் இடம்பெற்று வருகின்ற போதிலும், கடந்த சில நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீன்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கடற்தொழிலாளர்களுக்கு எரிபொருளுக்கு அதிக பணம் செலுத்த நேரிடுவதன் காரணமாக மீன்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக கடற்றொழில் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதிகமாக விற்பனையாகும் மீன்கள் கிலோ 2000 ரூபாவை எட்டியுள்ளதாகவும், இறால் மற்றும் நண்டு 1600 - 1800 ரூபாய்க்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாகவும் மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த மீன்கள் இதற்கு முன்பு ஒரு கிலோ 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இரட்டிப்பு விலை அதிகரிப்பு என்பது தாங்கிக் கொள்ள முடியாததெனவும் வடக்கு மாகாண மக்கள் தெரிவித்துள்ளனர்.
அகப்பட்டனர் சங்கிலித் திருடர்கள்
சங்கிலி திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குள், கடந்த மாதம் இருவேறு தினங்களில் சங்கிலி திருட்டு சம்பவங்கள் இரண்டு பதிவாகின.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் கடந்த 29ஆம் திகதி இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைவாக சங்கிலிகளை விலைக்கு வாங்கிய இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைதான நால்வரையும் நேற்று முன்தினம் நீதிமன்றில் முற்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டார்.
இரண்டரை கோடி ரூபாய் கஞ்சா கைப்பற்றப்பட்டது
130 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சி - பூநகரி - வேரவில் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் இரண்டரை கோடி ரூபாய் என்று மதிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த புலனாய்வு தகவலையடுத்து அந்தப் பகுதி நேற்று சுற்றி வளைக்கப்பட்டது.
இதன்போது, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சாவை வெளியிடங்களுக்கு அனுப்பும் நோக்கில் பொதியிடப்பட்ட நிலையில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட கஞ்சா 130 கிலோ என்றும் - அதன் மதிப்பு இரண்டரை கோடி ரூபாய் என்றும் கூறப்படுகின்றது. இந்தக் கஞ்சா பொதிகள் ஜெயபுரம் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டன.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY