
posted 28th November 2022
கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளில் (பாலர் பாடசாலைகள்) கடமையாற்றிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) இரா. துரைரெத்தினம் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
கிழக்கில் பெரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் முன்பள்ளி ஆசிரியர்கள் தற்போதய வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொருளாதமார பிரச்சினைகளுக்கு மத்தியில் மாதாந்தம் வழங்கப்படும் வெறும் 4000 ரூபா கொடுப்பனவுடன் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த மிகக் குறைந்த தொகையான கொடுப்பனவை தற்கால வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரித்து வழங்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரை ரெத்தினம் கிழக்கு ஆளுநருக்கு எழுதியுள்ள பகிரங்க மடலில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற பாலர் பாடசாலை கல்விப் பணியகமானது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, இம் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய 17கல்வி வலயங்களைக் கொண்டு 1681 பாலர் பாடசாலையின் கீழ் 3780 ஆசிரியர்களையும், அண்ணளவாக 50,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும், உள்ளடக்கி கிழக்கு மாகாண கல்விப் பணியகம் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வரும் நிலையில் முன்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் சிறப்பான சேவையை கடந்த காலங்களில் சேவையாற்றி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இப் பணியகத்தின் கீழ் செயற்படுகின்ற ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் தற்சமயம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பொருளாதார வீக்கம் மற்றும் திருமணம் செய்து மூன்று, நான்கு குழந்தைகளுக்கு தாயாகவும் மிகவும் ஏழ்மையுடன் பொருளாதார கஸ்டத்திற்கு மத்தியில் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வருடக் கணக்காக ஒரு சீருடையை அணிந்து செல்வதும், போக்குவரத்து செய்வதற்கு நிதி இல்லாமல் நடந்து செல்வதும், பொருளாதாரம் இல்லாத நிலையிலும் உறவினர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சேவையாற்றி வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை எந்த கல்விச் சமூகமும் பாராட்டாமல் இருந்து விட முடியாது.
பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தினால் வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவுகளை நம்பி காலை 7.30மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரையும் சேவை மனப்பாங்குடன் வறுமையின் உச்சத்தில் நின்று பாலகர்களுக்கு வழிகாட்டியாக ஆசிரியர் என்னும் பெயருடன் மன உழைச்சலுடன் இவ் ஆசிரியர்கள் நடமாடுவதோடு, பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காணர்கள், இலிகிதர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், ஏன் நிருவாகத்துறை சார்ந்த அதிகாரிகள் இன்னும் பல புத்தி ஜீவிகளையும், இன்னும் பல துறைகளைச் சார்ந்தவர்களையும் உருவாக்குவதற்காக நல்லாழுக்கத்தையும், கல்வி வழி காட்டலையும் கற்றுக் கொடுத்த பெருமை இவர்களையே சாரும்.
இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு மேலாகவும் சேவையாற்றி வரும் இம் முன் பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட வருடங்களாக மாதா மாதம் 4000ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை வழங்கி வந்தாலும் பொருட்களின் விலையேற்றத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இப் பணியகத்தின் கீழ் சேவையாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏதோவொரு வகையில் மாதாந்தக் கொடுப்பனவை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)