ஆளுனரின் இன நல்லிணக்கம்!

ஆளுனரின் இன நல்லிணக்கம்!

சிங்கள மொழிப் பாடசாலை ஒன்றை அண்மையில் மட்டக்களப்பில் பார்வீதிக்கு அண்மையில் கிழக்கு மாகாண ஆளுனர் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய ஆளுனர் அனுராதா ஜகம்பத் சர்வ தேசத்திற்கு ஒரு செய்தியைக் கூறியுள்ளார். சிங்கள மொழிப் பாடசாலையைத் திறந்து வைத்ததன் மூலமாக இன நல்லிணக்கத்தைக் கிழக்கு மாகாணத்தில் அவர் ஏற்படுத்தியுள்ளாராம். இதுதான் அவருடைய இனநல்லிணக்க செய்தியாகும்.

மட்டக்களப்பில் 1990 இற்கு முன்னர் இந்தப் பாடசாலை இயங்கியுள்ளது. தற்போது அப்பாடசாலை திறக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. ஆனால், இன நல்லிணக்கம் என்பது ஒரு சிங்கள மொழிப் பாடசாலை திறக்கப்படுவதன் மூலமாக ஏற்பட்டு விட்டது என்று ஆளுனர் கூறுவதுதான் ஆச்சரியமாக உள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துரைக்கையில்;

இந்த ஆளுனர் கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொண்ட செயற்பாடுகள் ஒரு தலைப்பட்சமானதாக அமைத்திருந்தன. பௌத்த மயமாக்கல், காணிகள் விவகாரம் என்பன தாம் சார்ந்த சிங்கள சமூகத்திற்குச் சாதகமானதாகக் காணப்பட்டன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மேய்ச்சல் தரைக் காணி களில் அம்பாறை, பொலன்னறுவை மாவட்ட சிங்களவர்களை சோளச் செய்கை என்ற பெயரில் குடியேற்றியமை, பட்டிப்பளைப் பிரதேச செயலகத்திற்குப்பட்ட கெவுளியாமடுப்பகுதியில் முந்திரிச் செய்கை என்ற போர்வையில் சிங்களர்களுக்குக் காணிகளை வழங்கியமை, வாகரைப்பிரதேச செயலகப்பிரிவுக்குப்பட்ட காரமுனையில் சிங்களவர்களைக் குடியேற்ற முயன்றமை போன்ற செயற்பாடுகள் இவரது ஆளுகைக் காலத்தில்தான் நடைபெற்றன.

இவற்றை விட கரடியனாறு குசலான மலை, வடமுனை நெடிய கல்மலை, திருகோணமலையில் கன்னியா, திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகம், புல்மோட்டை பொன்மலை, அம்பாறையில் சங்கமான் கண்டி, மாணிக்கமடு, பொன்னன்வெளி போன்ற பல இடங்களில் சிங்கள பெளத்த மயமாக்கலை மேற்கொள்ளும் பல செயல்கள் கிழக்கு மாகாண ஆளுனர் ஜகம்பத் அவர்களின் நியமனத்தின் பின்னர் கடுமையாக நடைபெற்றன; நடைபெறுகின்றன.

இப்படியாக தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள், கலாசார வழிபாட்டுத் தலங்கள் என்பவற்றைக் குறி வைத்து ஆக்கிரமிக்கும் சிங்கள பெளத்த மயமாக்கல் செயற்பாடுகள் கிழக்கு ஆளுனரின் காலத்தில் முனைப்படைந்துள்ளன. மேலும் ஏறாவூரில் பாரம்பரியமாக புன்னைக்குடா வீதி என்ற பெயரில் அழைக்கப்பட்ட வீதியை சிங்களப் பெயரால் நாமம் சூட்ட இந்த ஆளுனர் முயன்றதாக அறியப்படுகிறதது. பின்னர் அது மக்கள் எதிர்ப்பாலும், நசீர் அகமட் அமைச்சரின் தலையீட்டாலும் முறியடிக்கப்பட்டுள்ளது. இப்படியான செயல்களில் ஈடுபட்டு இன நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவித்த கிழக்கு ஆளுனர் ஒரு சிங்கள மொழிப் பாடசாலையை மட்டக்களப்பில் திறந்து வைத்ததன் மூலமாக இன நல்லிலக்கத்தினை ஏற்படுத்தியதாகக் கூறுவதை என்னவென்று கூற முடியும்?

சிங்கள பெளத்த அடிப்படைவாத அரசியல்வாதிகளாலோ, அதிகாரிகளாலோ ஒரு போதும் பல்லின மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என்பதே 75 ஆண்டு கால வரலாற்றுப் படிப்பினையாகும். இப் படிப்பினைக்குள் பாரபட்சமான போக்குடைய கிழக்கு ஆளுனரும் ஒருவராகியுள்ளார். இவருக்குத் தலையாட்டவென்று சில தமிழ் அடிவருடிகளும் உள்ளார்கள் என்பது கசப்பான உண்மையாகும் என்றார்.

ஆளுனரின் இன நல்லிணக்கம்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More