அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் கவனத்திற்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு பகிரங்க மடல்

எதிர்வரும் நாட்கள் இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் எதிர்கால அரசியல் மற்றும் உரிமைகள் சார்ந்து தீர்மானகரமான முடிவுகளை எட்டும் நாட்களாகும். இந்நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் இலங்கை மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து காத்திரமான நிலைப்பாட்டை மேற்கொள்ள ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க மடல் மூலம் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கு விடுத்திருக்கும் பகிரங்க மடலில் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாவது;

மக்கள் புரட்சியால் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் மற்றும் வடக்கு, கிழக்கு சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தலில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள், ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் (ஜன அரகலய) மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத் தீவின் மக்கள் எனும் வகையில், நாம் பெருமிதமடைகிறோம்.

தமிழின அழிப்புக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாதப் பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிடச் செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம்.

எதிர்வரும் நாட்கள் இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் எதிர்கால அரசியல் மற்றும் உரிமைகள் சார்ந்து தீர்மானகரமான முடிவுகளை எட்டும் நாட்களாகும். இந்நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் இலங்கை மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து காத்திரமான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் மக்களான நாங்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பேரினவாதத்தினால் அரசியல் ரீதியான அடக்குமுறைக்கும் வன்முறைகளுக்கும் தொடர்ந்தும் உள்ளாகி வருகிறோம். போர் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட வடக்கு கிழக்கு மக்கள் சார்ந்து எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்படவில்லை.

2015இல் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க – சிறிசேன 'நல்லாட்சி' அரசாங்கமும் 'நிலைமாறு கால நீதி' எனும் பெயரில் சர்வதேசத்தை நம்பச்செய்யும் வகையில் அர்த்தமற்ற திட்டங்களை முன்வைத்தது. இன்றுவரையில், வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் மக்கள் காணிகளும், பொதுக்காணிகளும் இராணுவத்தின் வசம் உள்ளன.

மக்களின் வளங்களை கட்டுப்படுத்துவதோடு சுரண்டி வருகிறது. இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையீடுசெய்வதோடு சிவில் நிர்வாக அதிகாரிகளையும் கட்டுப்படுத்துகிறது. வடக்கு கிழக்கில் நிழல் இராணுவ ஆட்சி காணப்படுகிறது

மக்கள் மீதான அச்சுறுத்தல்கள், வன்முறைகள், கண்காணிப்புகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் மறுக்கபட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் ஏதேச்சையான கைதுகள் நடைபெறுகின்றன. அதனால் நாம் தொடர்ந்தும் அச்ச வாழ்வே வாழ நேர்ந்துள்ளது. அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு இனமாக வடக்கு, கிழக்கு சிறுபான்மை மக்களான நாம் வாழ்ந்து வருகின்றோம்

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரப் பரவாலாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. எனினும், இலங்கையில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் அனைத்துமே அதிகாரத்துக்கு வரும் வரையில் வாக்குறுதிகளை வழங்கின. ஆட்சிக்கு வந்தபின்னர், அதிகாரப் பரவலாக்கத்தை புறந்தள்ளியதோடு மட்டும்மல்லாது, சிறுபான்மை அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பதை 'பயங்கரவாதமாக' சித்தரித்து சிங்கள மக்களை சிறுபான்மைக்கு எதிராக தூண்டிவிட்டே வந்தன.

நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம். வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டுவரும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில், ஒரே நிலைப்பாட்டில் செயற்பட வேண்டிய தருணமிது.

அவ்வகையில், வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கு கௌரவமான, உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கே பாராளுமன்றத்தில் வாக்களிக்குமாறு கேட்கிறோம்.

வடக்கு, கிழக்கு மக்கள் தங்களுக்கு வழங்கியிருக்கும் மக்கள் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு அறைகூவல் விடுக்கிறோம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க மடல் மூலம் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளது.

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் கவனத்திற்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு பகிரங்க மடல்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY