
posted 13th February 2023
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்துக்குச் சென்று, இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுவை சந்தித்து, பூகம்பத்தினால் பேரழிவை சந்தித்திருக்கும் துருக்கி மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு, அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டிலும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
மேலும், துருக்கியத் தூதுவருடன் தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அவர், ஏற்பட்டுள்ள நெருக்கடி, நிர்க்கதியிலிருந்து மக்கள் மீண்டு, வழமையான நிலைக்கு திரும்புவதற்கு பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், அனர்த்தத்தில் உயிரிழந்தோரின்
குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்ததோடு, பலியானோரின் ஆத்மாக்கள் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் மீடியா போரம் என்பன சார்பில் தலைவர் அல் - ஹாஜ் என்.எம். அமீன் துருக்கிய தூதரகத்திற்கு நேரில் சென்று இந்த அமைப்புகளின் சார்பில் அனுதாபத்தை தெரிவித்ததுடன் அனுதாப பதிவேட்டிலும் தமது துயரை பதிந்து கொண்டார்.
இவருடன் முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளர் சாதிக் சிஹானும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)