அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்ட 121 பேரின் இறப்பு - விநோ

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இரண்டாயிரம் நாட்களாக தங்கள் உறவுகளுக்காக தொடந்து மேற்கொண்டு வரும் அகிம்சை போராட்டத்தில் இதில் ஈடுபட்டு வந்த பெற்றோர் 121 பேர் நோய்வாய்பட்டும் முதுமை அடைந்த நிலையிலும் இறந்துள்ளனர். இவ் இறப்பு சாதாரண இறப்பல்ல. இதுவும் ஒரு கொலையாகும். இதற்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோதராதலிங்கம் (விநோ) தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிம்மாசன உரை சம்பந்தமாக மூன்றாவது நாட்களாக பாராளுமன்ற அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோதராதலிங்கம் (விநோ) வெள்ளிக்கிழமை (12.08.2022) பாராளுமன்றில் ஆற்றிய உரையில்;

ஜனாதிபதியின் சென்ற சிம்மாசன உரை சம்பந்தமாக மூன்றாவது நாளில் நாங்கள் கலந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கு முன்பு உரையாற்றிய பிரசன்ன ரணதுங்க அவர்கள் சர்வ கட்சி அரசியலின் தேவைகளைப்பற்றி கூறியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாங்கள் நாட்டின் இன்றைய அரசியல் ரீதியாக பொருளாதார ரீதியாக நாடு இன்று இருக்கும் இந்த நெருக்கடியான இந்த நேரத்தில் சர்வ கட்சி அரசியல் தேவையைப்பற்றி நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். உணர்ந்து கொள்ளுகின்றோம்.

அனைத்து கட்சிகளும் இணைந்து அப்படி ஒரு அரசாங்கம் உருவாகுமானால் நாங்கள் நிபந்தனைகளோடு இந்த அரசுடன் நாட்டு மக்களின் நலன் கருதி தற்பொழுதுள்ள சூழலை கருதி இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

ஆனால், கடந்த காலங்களில் ஆளும் கட்சிகளும் எதிர் கட்சிகளும் அப்பப்ப தமிழ் மக்களை ஏமாற்றியதும், தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஏமாற்றியதை நல்ல அனுபவமாகக் கொண்டு நல்ல பாடமாகக் கொண்டு எழுந்தமானமாக ஏமாற்றுத் தன்மையாக உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவதற்கு தயாரில்லை.

ஏனென்றால், யுத்தம் முடிந்த பின்பு ஐநா ஆணையாளரிடம் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களுக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு தீர்வாக மாகாண சபை ஊடாக பலப்படுத்துவதற்கு 13 பிளஸ் என தெரிவித்துக் கொண்டிருந்தவர்கள்.

ஆனால் எந்த நடவடிக்கை மூலமும் தமிழ் மக்களுக்கு தீர்வு முயற்சி எடுக்காமல் விட்டவர்கள். இது எங்களுக்கு நல்ல அனுபவம்.

இதேபோன்றுதான் நான்கரை வருடங்கள் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக தமிழ் மக்களுக்கு நல்ல அரசியல் தீர்வினை பெறுவதற்காக எங்கள் கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி அவரை நம்ப வைத்து எங்கள் 16 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இன்றைய ஜனாதிபதியும் அப்பொழுது இருந்த ஜனாதிபதி மைத்திரி அவர்களும் இணைந்து ஏமாற்றிய வரலாறு இருக்கின்றது.

இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இந்த சர்வகட்சி அரசாங்கத்துக்குக்கு இந்த நேரத்தில் ஆதரவு தர நாங்கள் தயாரில்லை.

ஆழும் கட்சி ஒரு தீர்வை தந்தால், எதிர் கட்சி அதை எதிர்க்கின்றார்கள். எதிர்கட்சி ஒரு தீர்வை தருவதற்கு தயாராக இருந்தால் ஆழும் கட்சியினர் அதை இந்த பாராளுமன்றத்தில் எரிப்பதற்கும் தயாராக இருந்த வரலாறும் உண்டு.

இதை நாங்கள் உண்ணிப்பாக பார்த்து கொண்டு இருப்பதுடன் எமது மக்களுக்கு நன்மை பயக்கும் விடயமாக இருந்தால் மட்டுமே நாம் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றோம்.

கடந்த நல்ல ஆட்சி காலத்தில் எங்களுக்கு 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் திட்டமிட்டு எங்களிடமிருந்தும், எங்கள் மக்களிடமிருந்தும் அந்நியப்படுத்தி பிரித்தெடுத்து சகுனி விளையாட்டு விளையாடினீர்கள்.

2009 இல் யுத்தம் நிறைவுற்ற காலத்திலிருந்து எங்கள் மக்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? என்று கேட்டவாறு 2000 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கு ஆகிய எட்டு மாவட்டங்களிலும் இந்த 2000 போராட்ட நாளை கிளிநொச்சியில் ஒரு போராட்ட நாளாக முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாங்கள் ஒரு சுலோகத்தை தூக்கி விட்டால் புலிகள் என்ற நாமத்தை சூட்டி விடுவீர்கள். இதுதான் இங்கு காலாகாலமாக நடைபெறுகின்றது. சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவது இங்குமட்டுமல்ல மாறாக வடக்கு கிழக்கு எல்லா பகுதியிலும் இதுதான் நடக்கின்றது.

பாராமன்றத்திலும் சிறுபான்மையினருக்கு கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இந்த 2000 ம் நாட்கள் போராட்டத்தில் 121 பெற்றோரை இழந்த நிலையிலே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில், இந்த பாராளுமன்றத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாங்கள் அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கிக் கொண்டு இருக்கின்றோம்.

இந்த 121 பெற்றோரின் இறப்பை நாம் சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது இவர்களும் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். காரணம் இவர்கள் அகிம்சை வழி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.

இவர்களின் மரணங்களுக்கு இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். காலி போராட்டம் அரசியல் கலந்தமையாலேயே அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஒரு தூய்மையான போராட்டம். அரசியல் கலப்பு இல்லாத போராட்டம். அதனால்தான் அவர்கள் தங்கள் மூச்சைக் கொடுத்து உணர்வு பூர்வமாக இந்த போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

இங்கு நீதி கிடைக்காது என்பதால் சர்வதேசம் இதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் இப் போராட்டம் தொடரும்.

கடற்கரைகளிலே சடலங்கள் ஒதுங்குகின்றன. யாருடைய சடலங்கள் என தெரியாதிருக்கின்றது. இது காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவினர்களாக இருக்கலாம் அல்லது இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம். இன்னும் யாரென்று தெரியவில்லை. விசாரணை நடைபெறவும் இல்லை.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாத பட்சத்தில் ஒருபோதும் இந்த நாட்டில் பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என தனது பாராளுமன்ற உரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோதராதலிங்கம் (விநோ) தெரிவித்தார்.

அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்ட 121 பேரின் இறப்பு - விநோ

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY