முப்பத்து மூன்றாவது ஆண்டு நிறைவு

அறநெறிக் கல்வி என்பது நல்லொழுக்க விழுமியப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது "அறமெனப்பட்டதே வாழ்க்கை" என்றும் "அறத்தால் வருவதே இன்பம்" என்றும் "மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தும் அறம்" எனவும் மேலோர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் சிந்தனைகளை வளரும் நாளைய சந்ததியினரின் மனங்களில் பதிய வைத்து ஆரோக்கியமான சமூகப் பொருத்தப்பாடுள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதே அறநெறிக் கல்வியின் நோக்கமாகும்.

இந்த வகையில் கல்வி வளமும், கவினுறு கலைவளமும், பக்திச் செழுமையும் நிறைவாகக் கொண்டுள்ள கல்முனை பாண்டிருப்பில் சிறப்பாக இயங்கிவரும் அறநெறிப் பாடசாலையாக நாவலர் அறநெறிப் பாடசாலை உள்ளது. அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் எத்தகைய இடர்களைச் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து முப்பத்து மூன்றாவது ஆண்டு விழாவை நோக்கி இந்த அறநெறிப் பாடசாலை வீறுநடை போடுகின்றது.

துயர் பகிர்வோம்

சைவத் தமிழ் உலகிற்கு அரும்பணியாற்றிய ஸ்ரீலஸ்ரீ அறுமுகநாவலரின் திருநாமத்தில் இயங்கி வரும் பாண்டிருப்பு நாவலர் அறநெறிப் பாடசாலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் 1990. 06. 17 ஆந் திகதி உருவாக்கப்பட்டது.

இந்து சமயத்தினதும் இந்துப் பெருமக்களினதும் நலன் கருதியும். நாளைய சிறார்களின் நல்வாழ்வு கருதியும் இந்து சமயக் கருத்துக்களை பிஞ்சு உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும் என்ற அடிப்படையை குறியாகக் கொண்டு பாண்டிருப்பு இந்து இளைஞர் மன்றம் இந்த அறநெறிப் பாடசாலையை தோற்றுவித்தது. அன்று தொட்டு இன்றுவரை பாண்டிருப்பு இந்து இளைஞர் மன்றம் சிறப்பாக இயங்கி வரும் சமய சமூக செயற்பாட்டு அமைப்பாகவுள்ளது.

பாண்டிருப்பு இந்து இளைஞர் மன்றத்தின் அன்றைய தலைவரும் தற்சமயம் கனடா தேசத்தில் வசித்து வருபவருமான முன்னாள் பொது சுகாதாரப் பரிசோதகர். நோ. விஜயரெத்தினம், ஓய்வு நிலை அதிபர் நல்லையா-கமலநாதன் ஆகியோரின் பங்களிப்பால் இந்த அறநெறிப் பாடசாலை உருவாக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த அறநெறிப் பாடசாலைக்கு அதிபராக காலஞ் சென்ற தபாலதிபர், கவிஞர் முத்தமிழ் திலகம் வ. ஞானமாணிக்கம் ஐயா (அக்கரை மாணிக்கம்) நியமிக்கப்பட்டார். இயல்பாகவே கல்வி, சமய, சமூக, கலை, கலாசார பணிகளில் அதீத ஆர்வமுடைய அந்தப் பெருமகன் "அறநெறிப் பாடசாலை எங்கள் உயிர்" என்ற அடிப்படையில் அவரது அன்புக்குப் பாத்திரமான அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் அர்ப்பணிப்பான சேவையாற்றியதை மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.

இதனைத் தொடர்ந்து அக்கரை மாணிக்கம் ஐயா சுகவீனமுற்றார். நிரந்தரமாகவே எம்மை விட்டுப் பிரிந்தார். இவ் வேளையில் அவரது வெற்றிடத்தை எந்தவிதமான தொய்வும் இன்றி செயற்படுத்தும் பொறுப்பினை கல்முனை கல்வி வலய இந்து சமயபாட ஆசிரிய ஆலோசகர் மா. லக்குணம் ஏற்று சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.

இத்தகைய வரலாற்றைக் கொண்ட இந்த அறநெறிப் பாடசாலை இந்துப் பண்பாட்டு விழுமியப் பண்புகளையும், கல்வியையும், கலைகளையும் வளர்த்து வருகின்மை போற்றுதலுக்குரிய விடயமாகும். இங்கு நாயன்மார்களின் குருபூசை தினங்கள் இந்து சமயப் பெரியார்களின் ஜனன தின நிகழ்வுகள், சிரார்த்த தின நிகழ்வுகள், சமய விழாக்கள், சமூதாய மட்டத்தில் சிறந்து விளங்கும் பெரியோரை கௌரவித்தல் உள்ளிட்ட பல வைபவங்கள் மிக நேர்த்தியாக இடம்பெற்று வருகின்றமை கண்கூடு.

இந் நிலையில் அறநெறிப் பாடசாலையின் போதனை ஏனைய பாடசாலைகளின் கல்வி போதனையில் இருந்து வேறுபட்டதாகும். இருந்தும் அறநெறிப் பாடசாலைக்கான கலைத் திட்டத்தை அனுசரித்து செல்வதாகவே அமைந்துள்ளது. இங்கு இடம்பெறும் போதனைகள் நாளாந்தம் வாழ்வில் பயன்தரத் தக்க சிந்தனைகளையும், உயர்ந்த பண்புகளையும் அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றால் மிகையாகாது.

இத்தகைய சமுதாயப் பணியை முன்னெடுத்துவரும் பாண்டிருப்பு நாவலர் அறநெறிப் பாடசாலையின் வளர்ச்சிக்காக அன்றும் இன்றும் இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர்களாக பதவியை அலங்கரித்தவர்கள் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் பதவி வழியில் இதன் செயற்பாட்டை கண்ணுற்று நல்ல பல நற்காரியங்களைச் செய்துள்ளனர்.

இதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் க. பத்மநாதன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் கவிதாயினி டாக்டர். புஸ்பலதா- லோகநாதன், தொழிலதிபர் க. லதன் ஆகியோர் அமரர் அக்கரை மாணிக்கம் ஐயா அதிபராகவிருந்த காலத்தில் உதவும் கரங்களாக இருந்தனர். தற்சமயம் இத்தகைய உதவுநர்களாக கனடாவில் வசிக்கும் முன்னாள் ஆசிரியர் பொன். சுகுமார் உதவும் பொற்கரங்கள் விசு கருணாநிதி மற்றும் இந்த அறநெறிப் பாடசாலையின் பழைய மாணவர்கள் உள்ளனர் என்று அறநெறிப் பாடசாலை அதிபர் மா. லக்குணம் குறிப்பிட்டார்.

இந்த வகையில் பாண்டிருப்பு நாவலர் அறநெறிப் பாடசாலை பல சவால்கள் இடையூறுகள் என்பவற்றுக்கு மத்தியில் தனது தொடரான பணியில் முப்பத்து மூன்று ஆண்டுகளை எட்டிப் பிடிக்கின்றது. கடந்து போன முப்பத்து இரண்டு ஆண்டுகளையும் பல வேதனைகளையும், சோதனைகளையும் தாண்டியும் வன்செயல், யுத்தம், சுனாமி, பாராமுகம் யாவையும் கடந்து மதமாற்றம், மனமாற்றம் யாவுக்கும் முகங்கொடுத்து திடங்கொண்டு போராடி வந்திருக்கின்றது இந்த அறநெறிப் பாடசாலை.

தற்சமயம் பாடசாலை மாணவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. விரும்பத்தகாத செயலில் மாணவ சமுதாயம் அள்ளுண்டு செல்லும் அபாய கரமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு பிரதான காரணங்களில் ஒன்று அறநெறிக் கல்விப் போதனைகள் முறையாக இடம்பெறாமையாகும். இப்போது நாம் எந்த இனம், மதம் என்று பாராமல் அவரவர் சமயம் சார்ந்த அறநெறிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது காலத்தின் தேவையாகும்.

இன்றைய உலகில் அதி முக்கிய தேவையாகவுள்ள "மனிதம்" வலுவடையவும் மனித மனங்களில் அன்பு பெருக்கெடுத்தோடவும் வன்ம உலகில் இடம்பெறும் விரும்பத்தகாத, செயல்கள்செத்து மடியவும் வேண்டுமாயின் இந்து தர்மத்தின் வழி நின்று அறநெறிக் கல்வியை பலமடையச் செய்ய வேண்டும்.

இந்த வகையில் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் பாண்டிருப்பு நாவலர் அறநெறிப் பாடசாலையின் வளர்ச்சியில் பங்கு கொண்ட யாவருக்கும் நன்றி பகர்தல் சாலப் பொருந்தும். அஃதே ஏனைய அறநெறிப் பாடசாலைகளின் வளர்ச்சிக்காக உழைத்தல் ஒவ்வொருவரினதும் சமூகக் கடமையும் பொறுப்புமாகும்.

கட்டுரை ஆக்கம்

செல்லையா -பேரின்பராசா
துறைநீலாவணை



முப்பத்து மூன்றாவது ஆண்டு நிறைவு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)