ஓய்வு பெறும் கல்வியலாளர் மு. சச்சிதானந்தம்
ஓய்வு பெறும் கல்வியலாளர் மு. சச்சிதானந்தம்

மட்டக்களப்பின் பழம்பெரும் கிராமங்களில் ஒன்றான களுவங்கேணி எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து தனது அயராத முயற்சியின் பயனாக கல்வி, தொழில் தகமைகளில் உயர்நிலையடைந்த முயற்சியாளன் மு. சச்சிதானந்தம். அவர்கள் 38 வருட கல்விச்சேவையில் இருந்து 31.12.2022ந் திகதியுடன் ஓய்வு பெற்றுச்செல்கின்றார்.

முத்துவேல் தங்கதாய் தம்பதியினரின் இரண்டாவது புதல்வரான இவர் தனது ஆரம்பக்கல்வியை சொந்த ஊரான மட்/ களுவங்கேணி விவேகாநந்தா வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை வந்தாறுமூலை விஷ்ணுமகா வித்தியாலயம் மற்றும் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்றுத் தேறினார்.

இவர் பேராதனை பல்கலைக்கழக கலைப் பட்டதாரியுமாவார். இதன் மூலம் இக் கிராமத்தின் முதலாவது பட்டதாரி என்ற பெருமையையும், சிறப்பையும் பெற்றார்.

துயர் பகிர்வோம்

அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட ஆசிரிய போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 27.12.1984ல் குருநாகல் மாவட்டத்தில் உள்ள நிக / நம்முவாவ முஸ்லீம் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்றார். இவருடைய சேவை கருதி நிக/கல்பாணவ முஸ்லீம் வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டு சேவையாற்றினார்.

பின்னர் தனது சொந்த ஊரான மட்/ களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்திற்கு இட மாற்றம் பெற்று வந்து அர்ப்பணிப்பான சேவையைச் செய்தார். காலக்கிரமத்தில் இவ் வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார்.

இவர் இங்கு கடமையாற்றிய காலத்தில் இப்பாடசாலையின் பாடவிதான இணைப்பாடவிதான மற்றும் பௌதீகவள மேம்பாட்டிற்காக கடினமாக உழைத்தார்.

பாடசாலையை தரம் உயர்த்தியதுடன் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/ த)ப் பரீட்சைப் பெறுபேறுகளின் அதிகரிப்புக்காக முன்னின்று செயற்பட்டார். சமூகத்தினரையும் இணைத்துக் கொண்டு பல்வேறு பௌதீக வளர்ச்சிகளை ஏற்படுத்தினார். இவரது துரிதமான செயற்பாட்டின் காரணமாக பாடசாலை அபரிதமான வளர்ச்சியடைந்தது. இவரது அயராத பணியை கருத்திற்கொண்டு இப்பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டாலும், நாகரீகம் கருதி அதனை ஏற்றுக்கொள்ளாது தொடர்ந்து பிரதி அதிபராகவே கடமையாற்றினார்.

முன்மாதிரியான ஆசிரியராக இருந்து சிறப்பாக கற்பித்தது மாத்திரமன்றி தான் கற்பித்த மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் வழங்கி பலருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவினார். பின்னர் மட்/ தன்னாமுனை புனித ஜோசப் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்து உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானப் பாடத்தினைக் கற்பித்து பலர் பல்கலைக்கழகம் புகுவதற்கு காரண கர்த்தாவாக விளங்கினார்.

சேவையுடன் மாத்திரம் நின்றுவிடாது தனது கல்வி தொழிற்றகமைகளை விருத்தி செய்து கொண்டார். பட்டபின் கல்வி திப்புளோ மற்றும் இரண்டு முதுமாணிப் பட்டங்களை கல்வித்துறை சார்ந்து பெற்றுக் கொண்டார்.

இதன் நிமிர்த்தமாக கல்வித்துறையில் பல உயர்பதவிகளை வகித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகர், முன்பள்ளி இணைப்பாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர், கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், இறுதியாக மட்டக்களப்பு ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இத்துடன் திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் பிராந்திய நிலையங்களின் வருகைதரும் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவ்வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் சிலவற்றில் அங்கம் வகித்து சமூகத் தொண்டுகளையும் செய்து வருவதும் போற்றத்தக்கது.

எல்லாவற்றிக்கும் மேலாக இவர் சிறந்த குணநலன்களை உடையவர். எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகுகின்ற மனிதராவார். நண்பர்களுடன் கலகலப்பாகப் பேசி நன்மதிப்பைப் பெற்றவர். உண்மையும், நேர்மையும், செயற்றிறனும், கடின உழைப்பும், சிறந்த குரல் வளமும், பேச்சாற்றலும் பெற்றவர். நல்ல ஆளுமைப் பண்புகளும், ஆற்றலும் மிக்கவர்.

இரு பிள்ளைகளுக்கு தந்தையான இவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவராகவும் இருக்கின்றார். தனது வாழ்வின் பெரும்பகுதியை கல்வித்துறைக்கு அர்ப்பணித்த ஒரு பெருந்தகை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விப் புலத்தில் "சச்சி சேர்" என்று நன்கறியப்பட்டவர். இவருடய அரும்பணிகள் காலத்தால் அழியாதவை. இவர் ஓய்வுபெறுவது எமது மாவட்ட கல்வித் துறைக்கு பெரிய இழப்பாகும். இவரது சேவை மேலும் எமக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.



ஓய்வு பெறும் கல்வியலாளர் மு. சச்சிதானந்தம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)