
posted 21st February 2022
கனவான வாழ்க்கை!
வாழ்க்கையைக் கண்டேன்
வாழத் துடித்தேன்
வாரத்தில் ஒருநாள் வெளி உலா செல்வேன்
என்றெல்லாம் நினைத்தேன்
நினைத்ததைக் கூட நடத்திட முடியா
மானிடனாக ஏன்தான் பிறந்தேன்?
உண்மை மரணிக்கிறதா!?
உண்மையை உரைத்து வன்மையை வாங்கும்
வாழ்க்கையை நீயேன் வரம் பெற்று கொண்டாய்
ஞானமோ இல்லா வாழ்ந்திட்டுப் போவோம்
என்றெல்லாம் கூறும் மனிதர் நடுவே?
இதயம் செய்த பாவம்தான் என்ன?
நினைவுகள் நெஞ்சை வாட்டுகையில்
கனவுகள் இளந்தென்றல் ஆகின்றனவே
உறவுகளே நஞ்சாய்ச் சுவறுகையில்
உயிருள்ள இதயம் என்னதான் செய்யும்?
நெற்றியில் போட்ட கோடு
வீட்டின் எரிச்சலைத் தாங்கா வெளியில வந்தேன்
சூரியன் சுட்டா பரவா யிலை என்று
கனிவாயிருந்த வார்த்தைகளெல்லாம் - இப்போ
காச்சிய ஈயம் காதில வார்ப்பது போல
சிந்தித்துப் பார்த்தேன் புரியவேஇல்லை
விளக்கமாய்ச் சொல்லுங்க ஏன்தானென்று!
வடக்கும் வாழ்வும்
நம்பியே வாழவந்த வாழ்க்கையும் போச்சு
வடக்கே உதித்ததால் உள்ள வழமும் போச்சு
உதடுகள் மூடி உணர்வுகள் அடங்கி
ஊனமாய்ப் போன வாழக்கையுமாச்சு
வாழ்க்கையின் விகாரம்
வாழ்க்கையில் நித்தமும் எத்தனை கண்டேன்
எத்தனை வாழ்க்கையை அப்பவும் கண்டேன்
அத்தனை நிந்தையும் எனதாய்க் கண்டேன்
என்தாய் என்னைப் பெற்றதால்தானா?