வாழ்க்கையின் வாதைகள்
வாழ்க்கையின் வாதைகள்

வாழ்க்கையின் உயரத்தில் இருந்த ஒரு நாள்
என்னைக் கீழே தள்ளினர் பூமியை முகர்ந்து வீழ்ந்தேன்
கிடந்த என்னை பலரும் மிதித்துப் புதைத்தனர்
துளிர்விட்டு அரும்பி சிறிதாய் வளர்ந்தேன்
அடியோடு என்னைக் கிள்ளியே எறிந்தனர்
வீசிய காற்றால் விசிறிய மணலால்
மீண்டும் மண்ணிணுள் புதைந்தே போனேன்
கால்கள்பலவும் மிதித்தே அழுத்தின
மூச்சுத் திணறிட முகத்தினைத் திருப்பினேன்
மண்ணுமோ எனக்கு உயிர்ப்பிச்சை தந்தது
மீண்டும் தளிர்த்தேன், விண்ணையும் கண்டேன்
உலகை எட்டி மெதுவாய்ப்பார்த்தேன்
கூப்பிடு தொலைவில் யாரும் இல்லை
குளிர்ந்த வாடையை மெதுவாய் முகர்ந்தேன்
அப்போது நினைவு சரளமாய் வந்தது
உயிர்த்தேன் என்று உணர்வுகள் சொல்லின
சிறிது சிறிதாய் வளர்ந்தே நிமிர்த்தேன்
வாழ்க்கை இதுதான் என்று வியந்தேன்

கழுகள் என்னைச் சுற்றியே பறந்தன
கவ்ந்திட்டுச் செல்ல ஆவலாய்த் தேடின
தெரிந்தவர் பலரோ கண்ணில் பட்டனர்
தெரியாமல் நானோ விலகியே மறைந்தேன்
தள்ளி இருப்பது சரியெனப் பட்டது
பிழை சரி சொல்ல யாரும் இல்லை
எண்ணத்தில் ஒன்றும் வரவும் இல்லை
வராதவாறு இல்லாமல் போயிற்று
என்ன நடந்தது? என்றதை விளக்க
நினைவுகள் இல்லை, நினைத்துப் பார்த்தேன்
வெறுமனாய் அனைத்தையும் அப்போ கண்டேன்
நானாய் வாழ்ந்தேன் நடைப்பிணமானேன்
அதுவும் எனக்கு மறந்தே போயின
உறவுகள் என்னுடன் வாழ்ந்ததுமில்லை
உரிமையோ கொள்ள யாருமே இல்லை
தனிமையில் இருந்த வாழ்வாய்ப் போயிற்று
வாழ்க்கையின் தாகம் கூடியே சென்றது
வினாக்களாக என்னை வாட்டி வதைத்தது.

தீய்ந்த வாழ்க்கை மனதினுள் எரிந்தது
அணையா விளக்காய் அகல் விளக்காச்சு
மறக்க முயன்றேன் முயற்சியில் தோற்றேன்
அடிக்கடி விழுவது வழக்கமாய் ஆச்சு
தோல்விகள் பல பெற்று பரிசுகள் சேர்ந்தன
தோன்றா இருந்தால் நலமின்று தோன்றிற்று
தோற்று தோற்று களைத்துப் போனேன்
துயர்களைக் குறைக்க, பகிர்ந்து அளிக்க
உற்றார், உறவினர் ஒருவரும் இல்லை
தனிமையில் வாழ்வது கொடுமையாய் கொன்றது
ஒருநாள் கதைப்பவர், மறுநாள் வெறுத்தனர்
ஒவ்வொன்றாய்க் குறைந்து இல்லாமல் போயினர்
தனிமரமானேன் என்று நான் நினைக்கையில்
தாங்கிப் பிடித்தனர் என் தாரமும், பிள்ளையும்
நானோ விழவில்லை இப்போ சாயவுமில்லை
எனதிரு தூண்கள் என்னை ஏந்தியதாலே ....

- நான்தான் -