
posted 22nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வழக்காளிக்கு நிவாரணம் அளிக்க முதல் நாளிலேயே இணங்கிவிட்டோம் - சிறீதரன் எம். பி
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளி கோரிய நிவாரணத்தை வழங்கி வழக்கை கைவாங்குவதாக வழக்கு விசாரணைக்கு எடுத்த முதல் நாளிலேயே அறிவித்துவிட்டோம், என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியில் ஏற்படுத்திய இணக்கப்பாட்டின் அடிப்படையில் பதில் சமர்ப்பணங்கள் ஒரே நாளில் செய்யப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு 11 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன் ஆகியோர் உட்பட நால்வர் தரப்பின் சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனாலேயே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று சுமந்திரன் எம். பி. சாடியிருந்தார்.
இது தொடர்பில் சிறீதரன் எம். பியிடம் கேட்டபோது,
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள வழக்காளியின் கோரிக்கையை ஏற்று அவருக்கான நிவாரணத்தை அளிப்பதாக கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி இவ்வழக்கு முதன்முதலாக விசாரணைக்கு எடுத்தபோதே நாம் நீதிமன்றுக்கு அறிவித்துவிட்டோம்.
அதன் பின்னர் இடையீட்டு மனுதாரர்கள் கொண்டுவரப்பட்டார்கள். தொடர்ச்சியாக கட்சிக்குள் அதுபற்றி கலந்துரையாடினோம். அந்த வகையில் கட்சியை நீதிமன்றில் இருந்து விடுவிப்பதற்காக எனது தலைமைத் தெரிவு உள்ளிட்ட கட்சியின் மூலக்கிளை தெரிவு முதல் அனைத்து பதவி நிலைகளையும் மீண்டும் மேற்கொள்வதற்கும் இணக்கம் வெளியிட்டிருந்தேன்.
இந்நிலையில், வவுனியாவில் அரசியல் உயர்பீடம் கூட்டப்பட்டு பதில் சமர்ப்பணங்கள் தொடர்பில் உரையாடல்கள் நடைபெற்றது. அந்த வகையில் எதிராளிகள் சார்பில் பதில் சமர்ப்பணங்கள் செய்யப்படும் என்ற இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், நான்கு எதிராளிகளால் சமர்ப்பணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நான் உட்பட ஏனைய நால்வரும் ஏலவே, மன்றுக்கு வழக்காளியின் கோரிக்கையை ஏற்பதற்கு தயார் என்பதை அறிவித்துவிட்டோம். அதற்கு மேலதிகமாக தேவையென்றால் சமர்ப்பணங்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம்.
இதேநேரம், பதில் சமர்ப்பணங்களை அனைவரும் ஒரேநாளில்தான் அளிக்க வேண்டும் என்றில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பதில் சமர்ப்பணங்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்காதிருப்பது முக்கியமானது, என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)