
posted 13th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வடக்கு, கிழக்கு அரசியல் இனி எங்களுக்கு கீழேயே
இனி எங்களுக்கு கீழ் வடக்கு - கிழக்கு அரசியல் நடவடிக்கை நடைபெறும். தலைவர் பிரபாகரன்மீதும் தமிழ்மீதும் பற்றுடைய அனைவரும் தன்னுடன் இணைய வேண்டும். இவ்வாறு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன்.
அவர் விடுத்திருந்த ஊடக அறிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் இனங்காணப்பட்டு அரசியல் தலைவராக இருந்து இயற்கை எய்திய சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுப்பெடுத்து நடத்துவார் என்ற நம்பிக்கையில் கட்சி அவரிடம் கையளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டத் தலைவர்கூட இல்லாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசுக் கட்சி என அனைத்தும் இன்று சிதறடிக்கப்பட்டுள்ளன.
உருளைக்கிழங்கு மூடை எல்லாம் கட்டவிழ்த்து ஓடி விட்டது என்று கூறுகின்ற நடப்புகளும் உள்ளன. தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தையை தற்போது அமைச்சராக உள்ள டக்ளஸ் நையாண்டியாக கூறியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் கட்டப்பட்ட மூடை கட்டவிழ்ந்தது உண்மைதான். அதனால்தான் அதனை கட்டுவதற்கு நான் வந்திருக்கின்றேன். இனி எங்களுக்கு கீழ் வடக்கு - கிழக்கு அரசியல் நடவடிக்கை நடைபெறும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.
15 வருடங்கள் நான் பொறுமையாக இருந்தேன். எங்களால் கையளிக்கப்பட்ட அரசியல் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மக்களின் எதிர்காலம் - பொருளாதாரம், மக்களின் வாழ்வு என்பவற்றை 30 வருட கால யுத்தத்தின் பின்னர் வளர்த்தெடுக்கும் நிலையே இருந்தது.
இங்கு திருடுவதும், சாப்பிடுவதுமான நிகழ்வுதான் நடந்தது. இன்றுங்கூட அவர்கள் பிரிந்து போகவே இருக்கின்றார்கள். அவிழ்த்துவிடப்பட்ட மூடையை கட்டவேண்டிய கடப்பாடு எனக்கு மட்டுமே உள்ளது. இது கருணா அம்மான் காலம், எல்லோரும் எதிர்பார்த்திருங்கள். சிறிய அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்கள் என அனைவரும் எம்மோடு இணைய வேண்டும்” என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)