
posted 13th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாணவர்கள் மத்தியில் வகுப்புவாத மோதல்கள்
மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, வகுப்புவாத மோதல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் இரா. முரளீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்களின் உளவள ஆற்றுகையை மேம்படுத்தும் செயல்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
யாழ். மருத்துவபீட வெளிநாட்டு பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையில், மட்டக்களப்பு மாவட்ட உளநல பிரிவினரது ஒருங்கிணைப்பில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் பணிப்பாளர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளில் உளவள ஆற்றுகைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களை பயிற்சியளிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சிப் பட்டறைக்கு, மட்டக்களப்பு மாவட்ட உளநல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் டி. சௌந்தரராஜா, வவுணதீவு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி எஸ். ஏ. ஜோதிலட்சுமி, உளநல சமூக சேவையாளர் என். நித்தியானந்தன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இங்கு மருத்துவர் இரா. முரளீஸ்வரன் உரையாற்றுகையில்;
மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல், வாழ்க்கையை திட்டமிடுதல், சரியான தீர்மானம் மேற்கொள்ளல் போன்ற ஆற்றலை சிறுவயதில் இருந்துதே வளர்ப்பதன் மூலமே எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். குறிப்பாக வாழ்நாள் முழுவதையும் மகிழ்ச்சிகரமாக்குவதற்கு, இளமைப் பருவ உளஆற்றுகை மிகமுக்கியமானதாகும்.
பாடசாலை இடைவிலகல், இளவயது கர்ப்பம், போதைப்பொருள் பாவனை, வகுப்புவாத மோதல் என்பனவற்றை தடுக்க வேண்டும். தற்கொலை போன்ற ஒழுக்க மாறான சமூக உருவாக்கத்தை இல்லாதொழித்து, சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும். பெற்றோரின் பங்களிப்புக்கு சமாந்தரமாக பாடசாலை ஆசிரியர்களின் பங்களிப்பும் இதற்கு மிக அவசியம் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)