
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மன்னார் மருத்துவமனைக்கும் சென்ற சுகாதார அமைச்சர்
நேற்று (18) வியாழக்கிழமை வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையிலான அமைச்சின் செயலாளர் உள்ளடங்கலான குழுவினர் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வதாக இந்த களப்பயணம் அமைந்தது.
இதன்போது, மருத்துவமனை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், மருத்துவமனையின் பணிப்பாளர், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் நேரடியாக குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக சி. ரி. ஸ்கான் இயந்திரம் இன்மையால் நாள்தோறும் அதிகளவான நோயாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதும், மருத்துவர்கள் பற்றாக்குறை, மருந்துகளின் குறைபாடு, சுத்திகரிப்பு பணியாளர் காணாமை, தேவையான மருத்துவ உபகரணங்கள் இன்மை, பாவனைக்குத் தேவையான அவசர நோயாளர் வண்டியின்மை உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் அமைச்சர் தலைமையிலான குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டன.
இதன்போது, விரைந்து தீர்க்கக்கூடிய மிகமுக்கிய விடயங்களை விரைவில் தீர்த்துத் தருவதாகவும், ஏனைய விடயங்களை வரவு - செலவு திட்டத்தின் ஊடாக பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் வாக்குறுதி வழங்கினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் உட்பட பலரும் பங்கேற்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)