
posted 10th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மன்னார் சிந்துஜாவின் மரணம் - உரிய நடவடிக்கை எடுப்போம் - சுகாதார அமைச்சர் உறுதி
மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்த விடயத்தில் ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண நேற்று (09) உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் மருத்துவ திருத்தச் சட்டம் மூலம் மீதான விவாதத்தில் நேற்று முன்தினம் (08) உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,
மன்னார் மருத்துவமனையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் மரணம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து துரிதகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவருக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண,
இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விசாரணை அறிக்கையை இதுவரை ஆராயவில்லை. குறித்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அது தொடர்பில் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை நாட்டில் நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகவே புதிய சட்டமூலமொன்றையும் முன்வைத்துள்ளோம் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)