
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மனிதப் புதைகுழியின் மேலே கதறி அழுது நீதி கோரிய மக்கள்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நேற்று (20) செவ்வாய்க் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனிதப் புதைகுழியின்மீது விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழுது தமக்கான நீதியை கோரினார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் அழைப்பின்பேரில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை கொக்குத்தொடுவாயில் போராட்டம் நடைபெற்றது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்; உண்மையை மறைக்கக்கூடாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமக்கு நீதி வேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “உண்மையை மௌனமாக்காதே: கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் சாட்சிகளை அச்சுறுத்தாதே”, “கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி வேண்டும்; சிறீ லங்கா இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும்”, “ஓ. எம். பி. ஓர் ஏமாற்று வேலை: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை”, “கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இலங்கை இராணுவத்தின் பங்கை அம்பலப்படுத்துங்கள்”, “வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்?” என்ற கோஷங்களை எழுப்பியதுடன், இந்த வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வடக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக கடந்த ஜூன் 29ஆம் திகதி கொக்குத்தொடுவாயில் நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்காக கிடங்கு வெட்டியபோது மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, முல்லைத்தீவு நீதிபதியின் முன்னிலையில் புதைகுழி தோண்டப்பட்டது. 52 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. கடந்த ஜூலை 16ஆம் திகதி நீதிமன்றின் உத்தரவின்படி புதைகுழி மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)