
posted 5th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மத்திய அரசு எடுத்த அதிகாரங்களை மாகாணத்துக்கு வழங்குவோம்
மத்திய அரசாங்கம் எடுத்த அதிகாரங்களை மாகாணத்துக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோருடன் உடன்பட்டுள்ளோம் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புதிய பாராளுமன்றத்தில் பொலிஸ் அதிகாரம் குறித்து பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.
திருகோணமலைக்கு நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசுக் கட்சியினரை நேற்று சந்தித்து பேசினார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
- 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
- மத்திய அரசாங்கம் எடுத்த அதிகாரங்களை மாகாணத்துக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோருடன் உடன்பட்டுள்ளோம்.
- காணி அதிகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.
- பொலிஸ் அதிகாரம் குறித்து புதிய பாராளுமன்றத்தில் பேசுவோம்.
13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் பேசுவோம். அப்போது, இன்னமும் அதிகாரங்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாகாண சபைத் தேர்தலை 1988 ஆம் ஆண்டு சட்டத்தின்படி நடத்துவோம் என்றும் கூறினார்.
இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை அபிவிருத்தி செய்யப்படும். பிரதான துறைமுகமாக திருகோணமலை மாற்றப்படும். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் திருகோணமலையில் அமைக்கப்படும். கப்பல்துறை விருத்தி செய்யப்படும். ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் முதலீட்டு வலயங்களை அமைப்பதற்காக இரு நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது.
தலைமன்னார் - திருகோணமலை இடையே புதிய பாதை திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது, தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)