
posted 12th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொலிஸாரிடமிருந்த கலாசார மண்டபம் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது
பொலிஸாரின் பாவனையில் இருந்து வந்த பெரிய நீலாவணை கலாசார மண்டப வளாகம் கல்முனை மாநகர சபையினால் முழுமையாக பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான இந்த வளாகம் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் - பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெரிய நீலாவணை கலாசார மண்டப வளாகத்தில் இருந்து பொலிஸ் வெளியேறியுள்ளதுடன் இப்பொலிஸாரின் விடுதி வசதிக்காக கல்முனை மாநகர சபையினால் மாற்று இடம் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு பிற்பகுதியில் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தின் (LDSP) கீழ் பெரிய நீலாவணையில் கலாசார மண்டபம் ஒன்றை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, முதலாம் கட்டப் பணிகள் முடிவுற்று, இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் பெரிய நீலாவணையில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் இதனை தற்காலிக தங்குமிட விடுதியாக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இக்கலாசார மண்டபத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து பொலிஸாரின் விடுதியை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் மேற்கொண்டிருந்தார்.
இதனால் கலாசார மண்டப நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் காணப்பட்ட தடைகளும் சிக்கல்களும் நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)