
posted 19th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பொது வேட்பாளர் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் - தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளவும் இல்லை.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவும், தமிழ் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் இன்று திங்கள் (19) பகல் இடம்பெற்றது.
40 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 39 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் சுமுகமாக போகும் என்று நம்புகிறேன்.
கிழக்கில் சாணக்கியனுக்கு 60 கோடி ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாகவும், மேலும் சில மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி நிதி வழங்கியதாக கூறப்படுவதுடன் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி எந்த அடிப்படையில் நிதி வழங்கினார் என அவரிடம் வினவியபோது,
இது போலதான் நானும் கேள்விப்பட்டுள்ளேன். எதிர்ப்பரசியலில் ஈடுபடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத்தான் எனக்கும் தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.
தற்பொழுது தமிழ் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வதற்கு வடக்கு, கிழக்கில் முஸ்திப்புக்கள் நடைபெறுகிறது. பொது வேட்பாளர் வடக்கு கிழக்கில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப் போகிறது என அவரிடம் வினவப்பட்டது.
அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருந்தாலும் நான் பலருடன் கலந்துரையாடி கிரகித்துக் கொண்டதற்கு அமைவாக, பொது வேட்பாளர் குறித்து மக்கள் மத்தியில் சாதகமான அபிப்பிராயம் இருப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டார்.
ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு வேப்பாளருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். நீங்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள். தமிழ் மக்களிற்கு நீண்ட காலமாக உள்ள அரசியல், அவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் உள்ள நிலையில், எதனை அடிப்படையாகக் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள் என அவரிடம் வினவிய போது,
அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட முன்பு அதாவது, நாடு பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்று கொண்டிருந்த போது, இன்று ஜனாபதி வேட்பாளர்களாக வோட்டு போட முன்வந்திருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டை பொறுப்பெடுத்து பிரச்சினையிலிருந்து மீட்டெடுக்க உதவுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர யாரும் முன்வரவில்லை. அவர் துணிவோடு வந்து ஆற்றலையும், வல்லமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அன்றிலிருந்து அவருக்கே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்துள்ளேன். அதேவேளை தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவரது காலப்பகுதியில் தீர்வு காணலாம் என்று நினைக்கிறேன்.
அவர் மாத்திரம் வென்று வந்தால் போதாது. அவருடன் சேர்ந்து பயணிக்கக் கூடியவர்களும் வெற்றி பெற வேண்டும்.
ஈபிடிபியை எடுத்துக்கொண்டால், ஜனாதிபதி தேர்தல் முடிந்து நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஈபிடிபிக்கும் கணிசமான வாக்குகளும், ஆசனங்களும் கிடைக்குமாக இருந்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்குப் பிறகு எமது மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கும் குறுகிய காலத்திற்குள் தீர்வு காணலாம் என்று நம்புகிறேன். நான் ஆதரிப்பதற்கு அதுகும் ஒரு காரணமாகும்.
கடந்த காலத்தில் கட்சிகள் அதை செய்து காட்டவில்லை. தமிழர் தரப்பினரும் தோல்வி கண்ட கட்சிகளாகத்தான் தங்களுடைய கொள்கைகளை முன்வைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)