பல அழிவுகளினால் ஆட்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நம் தேசத்தைக் கட்டியெழுப்ப என்னுடன் ஒன்றிணையுங்கள் - ஜனாதிபதி

தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

அத்துடன், உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன் - என்றும் உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரையாற்றினார். அந்த உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதேபோன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்னைகளையும் நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பால்பட்ட காரணங்களால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒருசில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஓர் ஆலோசனை குழுவையும் நியமித்தேன். இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்தவன். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

இன்றைய இக்கட்டான நிலைமை, நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகமும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கோவிட் நோய்த் தொற்றால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நாட்டின் அரசியல்வாதிகளினதும், புத்திஜீவிகளினதும் பொறுப்பு. ஒன்றிணைந்து பிரச்னைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பதேயாகும். இன்றைய பிரச்னைகளுக்கு மூலகாரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடி ஆகும்.

ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும். கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும். அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 3 பில்லியன் டொலர்கள் கிடைக்கக்கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 2 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். இதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 5 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும். ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2. 5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆனால், ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 7 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

இதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 4 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 5 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். இதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயல்பட வேண்டும்.

இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எங்கள் கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். இதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலுக்குப் பிறகு, அனுகூலங்கள், பிரதிகூலங்களை ஆய்வுசெய்து அவர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நான் முடிவு செய்தேன்.

கடந்த காலத்தில் நான் எடுத்த சில முடிவுகளால் இறக்குமதிச் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த பிரச்னையை முன்கூட்டியே கண்டுகொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். மேலும், உள்நாட்டில் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவித்தோம். அதேபோன்று, பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பயிர்களை நம் நாட்டில் பயிரிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அவற்றின் வெற்றிகரமான முடிவுகளை இப்போது காண்கிறோம்.

இறக்குமதி செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்னை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதி செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.

எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயல்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம். கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பல அழிவுகளினால் ஆட்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நம் தேசத்தைக் கட்டியெழுப்ப என்னுடன் ஒன்றிணையுங்கள் - ஜனாதிபதி

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More