
posted 29th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பண்ணையில் 'றேஸ்' ஓடிய குழு கைது
யாழ்ப்பாணம் நகரின் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், மதுபோதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நகரின் பண்ணை பகுதியில் வார இறுதிநாட்களில் பொழுதுபோக்குக்காக ஏராளமானவர்கள் கூடுகின்றனர். இவ்வாறு கூடுபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இளைஞர் குழுக்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோன்று, குடிபோதையில் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் சிலர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக புதிதாக பொறுப்பேற்ற சூரிய பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் விசேட பொலிஸ் குழு ஒன்று நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனையில் களமிறங்கியது.
இதன்போது, பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழு ஒன்றை கைது செய்ததுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்தது. இதேபோன்று மதுபோதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களையும் கைது செய்தது.
இதேவேளை, போதைப்பொருளை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுக்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)