
posted 6th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாட்டின் 9ஆவது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்குள் சம்பந்தன் இறந்துவிட்டார்
இலங்கையின் 09ஆவது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவை பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.
மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி, இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று முன் தினம் (04) மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன் மற்றும் ஞா. ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டார கிளை தலைவர், செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)