
posted 3rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
துரோகம் இழைத்தார் ரணில் இனி அவரை நம்பமாட்டோம் - விக்கினேஸ்வரன்
“கடந்த செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டார். அதனால் இனியும் அவர் நல்லவர்-நம்பிக்கைக்கு உரியவர் என்று சொல்லமுடியாது” இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்கினேஸ்வரன்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடியவர்கள் என யாரை நம்பலாம் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
மற்ற வேட்பாளர் ஒரு இளைஞர். இவர்களில் யார் நல்லவர் என்று சொல்லமுடியாத நிலை உள்ளது. அவர்கள் இருவரும் சிங்கள பெளத்த எண்ணத்தில் ஊறி இருப்பவர்கள். அதில் இருந்து வெளியே வரக்கூடியவர்களாக அவர்கள் இல்லை என்றார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சி ஏதேனும் ஒரு காரணத்தால் தோல்வி அடையுமாக இருந்தால் அடுத்த கட்டமாக உங்கள் நடவடிக்கை என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்;
இதில் தோல்வி அடைவதற்கு இடமில்லை. தமிழ் பொது வேட்பாளர் போட்டியில் வெல்லவேண்டும் என்று வரவில்லை. எங்கள் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யவேண்டும் என்பதற்காகவே அவரை முன்னிலைப்படுத்துகிறோம். இதில் தோற்றுப்போக எதுவும் இல்லை. தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி தமிழர்களின் அபிலாஷைகள் என்ன என்பதை தெரியப்படுத்தும் நிலையை நாம் உண்டாக்க முடியும். இதுதான் எங்கள் பலம். எங்கள் கணிப்பு, என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)