
posted 14th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திருக்கோவிலில் மீண்டும் இல்மனைற் அகழ முயற்சி -மக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தம்
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசமான திருக்கோவிலில் மீண்டும் இல்மனைற் அகழ்வதற்கான ஆய்வினை மேற்கொண்டுவந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (12) திங்கட்கிழமை திருக்கோவில் விநாயகபுரம் கோரைக்களப்பு முகத்துவாரப் பகுதியில் இடம்பெற்றது.
திங்கட்கிழமை அதிகாலை இல்மனைற் அகழ்வுக்கு பொறுப்பான தம்சிலா எக்ஸ்போர்ட் கம்பனி நிர்வாகிகளும் ஊழியர்களும் முகத்துவாரத்தில் கூடினர்.
கள ஆய்வுக்கான இயந்திரம் மற்றும் உபகரணங்களும் கொண்டு வரப்பட்டன.
அங்கு இல்மனைற் அகழ்வதற்கான சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்காக இந்தக் குழுவினர் வந்திருப்பதாக தகவல் காட்டுத்தீபோல் பரவியது.
ஒருசில நிமிடங்களில் பொதுமக்களும் அங்கு குவியத்தொடங்கினர்.
அதேவேளை, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன், காரைதீவு முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில், சட்டத்தரணி கே.ஜெயசுதன் மற்றும் பலர் ஒன்று கூடினர். பொலிஸாரும் அதிரடிப்படையினரும் அங்கு நின்றிருந்தனர்.
இதற்கு பிரதேச சபை அனுமதி பெறப்பட்டதா? என்பதை அறிய
சற்று நேரத்தில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜெயந்தி வீரபத்திரன வரவழைக்கப்பட்டார். அதன் பின்பு அங்கு பேச்சுகள் இடம்பெற்றன.
அங்கு குறிப்பிட்ட சிலரே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏனைய பொதுமக்கள் சுமார் 500 மீற்றருக்கு அப்பால் பொலிஸாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
ஆய்வு தொடர்பில் குறித்த கம்பனி நிர்வாகி, பொறியியலாளர் கூறுகையில்,
நாங்கள் இங்கே இல்மனைற் அகழ்வுக்காக வரவில்லை. அது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவே வந்திருக்கிறோம். அகழ்வு என்றால் பிரதேச சபையில் நாங்கள் அனுமதி பெற வேண்டும். ஆனால், இது ஆய்வு. எனவே, பிரதேச சபை அனுமதி தேவையில்லை. நேரடியாக கரையோரம் பேணல் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து அனுமதி பெற்று வந்திருக்கின்றோம் என்றார்.
அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், சட்டத்தரணி ஜெயசுதன் ஆகியோர் கூறுகையில்,
மக்கள் விரும்பாத முயற்சியை நீங்கள் தொடர்ந்து செய்கின்றீர்கள். நாங்கள், அதாவது பொது மக்கள், இதனை கடந்த நான்கு ஆண்டுகளாக முற்றாக எதிர்த்து வந்திருக்கின்றோம். இந்த நிலையில் இப்பொழுது தேர்தல் காலம். எனவே, இப்படியான வேளையில் இந்தச் சம்பவம் இன முரண்பாடுகளை, குழப்பங்களைத் தோற்றுவிக்கலாம். இம் முயற்சியை கைவிடுங்கள். எமக்கு இந்த அகழ்வு மற்றும் ஆய்வு தேவையில்லை. இதனை நிறுத்தி விட்டு நீங்கள் பாதுகாப்பாக வெளியேறுங்கள் என்றனர்.
இதன்போது, கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களப் பணிப்பாளர் நாயகம், ஆய்வுக்கான அனுமதியை வழங்கியுள்ளார் என்று ஆவணம் காண்பிக்க பட்டது. இந்த நிலையில், அங்கு நின்ற சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எமது பிரதேசத்துக்கு அவுஸ்திரேலிய நிறுவனமொன்று வந்து எமக்குத் தெரியாமல் இல்மனைற் அகழ்வுப் பணிக்கான ஆரம்ப வேலையை மேற்கொள்ளத் தலைப்பட்டனர்.
அப்போது, பொது மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். அதுமட்டுமல்ல, மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் ஊர்வலத்தை நடத்தி பிரதேச செயலரிடம் மகஜரும் கையளித்தோம். அத்துடன் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)