
posted 5th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பு - கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய ஜனாதிபதி ரணில்
திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்திலுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்காமல் தவிர்த்த ஜனாதிபதி ரணில் அந்த ஆலயம் இந்திய நிதியுதவியில் புனரமைக்கப்படும் என்று கூறினார்.
நேற்று(04) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தமிழ் அரசுக் கட்சியினரை சந்தித்து உரையாடினார்.
இதன்போது, வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயப் பகுதியை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றுவது என 2019ஆம் ஆண்டிலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல இடங்களில் பேசியுள்ளனர். பல வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால், அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. அதை அகற்றித் தரவேண்டும். இதன்மூலம் அந்த ஆலயத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்காத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “திருக்கோணேஸ்வரம் ஆலயம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் புனரமைக்கப்படும். அரசாங்கமும் இதற்கு பங்களிக்கும்” என்று மாத்திரம் கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)