
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திராவிடர் கழக தலைவர் வீரமணி யாழ். வருகிறார்
முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவரான அ. அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப்பேருரை ஆற்றுவதற்காக தமிழ்நாட்டின் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
அமிர்தலிங்கத்தின் பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள ரிம்மர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தந்தை செல்வாவுக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக இருந்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இணைந்த இவர் 1956ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம். பியானார். தந்தை செல்வாவின் தளபதி என்று சிறப்பு பெயரால் அழைக்கப்பட்ட இவர், தந்தை செல்வா தமிழர் விடுதலை கூட்டணியை உருவாக்கியபோது அதில் இணைந்தார்.
1977இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவிவகித்தார். ஆயுத வழியை நாடிய இளைஞர்களுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து 1989 ஜூலை 13ஆம் திகதி அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)