
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தாளையடி கிராமத்தை தனியானதொரு கிராம சேவகர் பிரிவாக மாற்ற எதிர்ப்பு
தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக மருதங்கேணி கிராம மக்கள் நேற்று காலை 9:30 மணிமுதல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு காணப்படுகின்றது.
இக் கிராம சேவகர் பிரிவில் மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு, தாளையடி என்கின்ற மூன்று கிராமங்கள் அடங்குகின்றன.
இந்நிலையில், தாளையடி என்ற சுமார் 140 குடும்பங்களைக் கொண்ட கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் இரகசியமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்து, மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் மருதங்கேணி எங்கள் சொத்து இதனை ஒருநாளும் பிரிக்க இடமளிக்க மாட்டோம், தாளையடியில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்திற்காக எமது பாரம்பரிய நிலங்களை அபகரிக்காதே, உங்கள் டீலுக்காக தாளையடி கிராமத்தை பிரிக்காதே, மருதங்கேணி எங்கள் பூர்வீக சொத்து, உங்கள் நலனுக்கு எங்கள் பிரதேசம் லஞ்சமா, எல்லை நிர்ணயம் செய்தபோது அயல் கிராமங்களை அழைக்காதது ஏன்? என்றவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)