
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்கு; எனது கருத்தை திரிபுபடுத்தி பிரசாரம் - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் நான் தெரிவித்திருந்த கருத்துகள் பற்றி தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கேள்வி - பதிலிலேயே மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. விருப்பு வாக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம். இது தொடர்பில் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னாருக்குத்தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்களிக்க வேண்டும் என்று நான் எந்த கோரிக்கையோ அல்லது ஆலோசனையோ முன்வைக்கவில்லை.
பல கேள்விகள் பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்படும்போது எமது அடிப்படை குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களை திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடக சகோதரர்களுக்கு உண்டு என்பதைக் காணமுடிகின்றது. ஆனால் அவை என்னுடைய கருத்துக்கள் அன்று - என்றுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)