
posted 20th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி
“சவால்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” இவ்வாறு இன்று (20) உறுதியாகக் கூறினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று (20) இடம்பெற்ற, உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
சவால்களை வெற்றிகொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுவான அடித்தளத்தில் முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம். அதனால்தான் இன்று மக்கள் கையில் பணம் இருக்கிறது. அன்றைய தினம் நாட்டில் உள்ள பெருந்தொகையான மக்கள், தமது வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.
ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. அவர்களை இன்று காணவில்லை.
மற்றொரு பகுதியினர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கப் போவதாக அறிவித்தனர். இன்று அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள்.
நாம் முன்னெடுத்த வலுவான வேலைத் திட்டங்களினால், அவர்களால் மக்கள் மத்தியில் செல்ல முடியவில்லை. நாம் உருவாக்கிய சக்தியை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதற்கு அவர்களிடம் பதில் இல்லை.
ஆனால், எமது செயற்பாட்டை நாம் இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்.
மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட குழுக்கள், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும், தொலைநோக்குடைய, தெளிவான திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது.
இவர்கள் போலிப் பிரசாரம் செய்வதையும் மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
பொய் சொல்வதால் நாட்டை முன்னேற்ற முடியாது. சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளை போல இலங்கையை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் குறித்து, நாம் சிந்திக்க வேண்டும். நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தனித்தனியாகச் செயற்படும் நேரங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு கட்டமைப்பில் ஒன்றாக வேலை செய்வதற்கான இயலுமையையும் கொண்டிருக்க வேண்டும். வேலையின்மையினால் பாதிக்கப்பட்டுள்ள இளையோருக்கு, வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.
நாட்டில் 25 வீத வறிய மக்கள் உள்ளனர் என்பதையும் மறந்துவிட முடியாது.
அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கான பல்வேறு பொருளாதார திட்டங்கள் உள்ளன. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் உள்ளிட்ட கட்சிகள், கடந்த ஆறு மாதங்களாக, ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களை செய்து வருகின்றன.
அந்த கட்சிகள் ஒரு வருடமாக அதற்காக பாடுபடுகின்றனர். நாம் உரிய நேரத்தில் பணிகளை ஆரம்பிப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
இந்த சந்திப்பில், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, அருந்திக பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, பிரேமநாத் சி.தொலவத்த, மதுர விதானகே, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார உட்பட, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)