
posted 22nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி தேர்தல் எங்களின் வாக்கு தமிழ் பொது வேட்பாளருக்கே
“நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம்” என்று அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன்.
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. இதில், பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அவரின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
வட, கிழக்கு தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒஸ்லோ தீர்மானம், சிங்கள வாக்காளரிடையே வளரக்கூடிய வெறுப்பு நிலை என்றெல்லாம் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் தற்போது போதிய அளவு ஆதரவு வாக்குகளை பொது வேட்பாளர் பெறாவிட்டால் என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தேர்தல் போட்டி ஒன்றில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர் 'நான் கட்டாயம் தோற்கப் போகின்றேன்' என்ற மனோநிலையுடன் போட்டியிடுவதில்லை. 'மக்களை என் பக்கம் திருப்ப முடியும். அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்' என்று எண்ணியே தேர்தலில் நிற்கின்றார். இவ்வாறான முரண்நிலைகளில் நின்று கருத்துரைப்பவர்கள் தாமும் சேர்ந்து பொது வேட்பாளருக்கு ஆதரவைத் தெரிவித்தால் என்ன நடக்கும் என்று சிந்திப்பதில்லை. முரண்நிலைகளில் நிற்கும் எமது சகோதர, சகோதரிகள் யாவரும் எமது தமிழ் உறவுகளே. ஆகவே, நாம் யாவரும் தமிழர்களாக எமது வருங்காலம் பற்றி சிந்திப்பது அவசியமாகும்.
முரண்நிலைகளில் நின்று அடம்பிடிப்பது தமிழர்களின் பிறவிக்குணம். தான் மற்றவரிலும் பார்க்கக் கெட்டிக்காரன் என்று உலகுக்கு எடுத்தியம்ப வேண்டும் என்ற ஏக்கமே இவ்வாறான நடத்தைக்குக் காரணமோ நான் அறியேன். எது எவ்வாறு இருப்பினும் நாம் யாவரும் தமிழர்களாக சிந்தித்தால் எமது வாரிசுகளின் வருங்காலம் பற்றிய கரிசனை எம்மை கட்டாயமாக ஆட்கொள்ளும். 'நாங்கள் இன்று சொகுசாக வாழ்ந்துவிட்டு போவோம். நாளை எமது பிள்ளைகளுக்கும், தமிழ் மக்களுக்கும் என்ன நடந்தால் எமக்கென்ன' என்று சிந்திப்பவர்கள் தான் பல பிழையான கருத்துகளை தமிழ் மக்களிடையே விதைத்து வருகிறார்கள். அதுவும் கொழும்பில் எனது தமிழ் நண்பர்களின் சிந்தனை பொதுவாக ஒரேவாறாகச் செல்வதை நான் காண்கின்றேன். அவர்கள் என்னிடம் கேட்டதுண்டு, 'நாங்கள் யாவரும் இலங்கையர்கள் தானே? ஏன் நாங்கள் தமிழர்களாகச் சிந்திக்க வேண்டும்?' என்று.
அவர்களுக்கு நான் கூறும் பதில் ஒன்றுதான். 'நாம் ஒரு நாட்டு மக்கள் என்பதில் எந்தவித முரண் கருத்துக்கும் இடமில்லை. ஆனால், வட - கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வெறும் சிறுபான்மையினர் அல்ல. அவர்கள் வட, கிழக்கின் பெரும்பான்மையினர். ஆகவே, எமக்கான தனித்துவத்தை பெரும்பான்மையினர் ஏற்காது இவ்வாறு கூறினால் 'நீங்கள் எங்களுடன் சேருங்கள். எங்களுடன் ஐக்கியமாகி விடுங்கள்' என்பதுதான் அதன் அர்த்தம். அதாவது எமது தனித்துவத்தை நாங்கள் மறந்துவிட வேண்டும். கூடிய விரைவில் இந்நாட்டு மக்கள் யாவரும் சிங்கள - பௌத்தர்களாக மாற வேண்டும் என்பதே அதன் உள்ளர்த்தம். ஆங்கில மொழிப் பிணைப்பால் நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டோம். ஆனால், இன்று சிங்கள மொழி மூலம் ஒற்றுமை தேடுபவர்கள் எம்மை ஆட்கொண்டு ஆள வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயலாற்றுகின்றனர்' என்று கூறுவேன்.
வட, கிழக்கு மக்களாகிய நாம் மூவாயிரம் ஆண்டுகால தொடர் வரலாற்றைக் கொண்டவர்கள். எமக்கென ஒரு மொழியுண்டு. வாழ்முறையுண்டு. வாழ் நிலங்கள் உண்டு. கலை, கலாச்சாரம் உண்டு. பண்பாடு உண்டு. சிங்கள மக்கள் இவற்றை ஏற்று எமக்கான அரசியல் அதிகாரங்களை வழங்கி எம்முடன் ஒன்றிணைந்து சென்றால்த்தான் அது ஒற்றுமை. இல்லை என்றால் அது ஆக்கிரமிப்பு.
இந் நாட்டில் எமது சிங்கள வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களித்தால் அது ஒற்றுமையாகாது. அது சிறுபான்மையினரின் பயத்தின் அறிகுறி. 'எமக்கு என்ன நடக்குமோ என்ற பீதியில் தான் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம்' என்று கூறாமல் எம்மவர், 'நாம் எல்லோரும் ஒரு நாட்டு மக்களே. அதனால்த்தான் உங்களுக்கு நாம் வாக்களித்தோம்' என்று கூறத் தலைப்படுகின்றார்கள். அது தவறான வழிமுறை. தவறான கூற்று. அவ்வாறு சிந்தித்து நடந்து கொண்டால் எமது தனித்துவம் பறிபோய்விடும். எமது காணிகளும், வளங்களும் சூறையாடப்பட்டுவிடும். எமது தொழில்கள், கைத்தொழில்கள் போன்ற பலவற்றிலும் இருந்து எம்மைப் பெரும்பான்மையினர் வெளியேற்றிவிடுவார்கள். வெளிநாடுகளுக்கு செல்வதே எமக்கிருக்கும் ஒரே தேர்வாக வந்துவிடும். பலருக்கு இன்று வெளிநாடு செல்வதே ஒரேயொரு தேர்வாகப்படுகின்றது. படித்த பல் தொழில் விற்பன்னர்கள் கூட எம்மைவிட்டு வெளிநாடு போகவே விருப்பப்படுகின்றார்கள். எமது சனத்தொகை வெகுவாக குறைந்து வருகின்றது.
எனவே, எங்களுடைய கட்சியின் இந்த தேசிய மகாநாட்டில் நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம் என்று உறுதி பூணுவோமாக என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)